Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக - பாஜ கூட்டணியில் ஏற்படும் சலசலப்புகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு: விஜய்க்கு பதிலடி கொடுக்க எடப்பாடி உத்தரவு

சென்னை: அதிமுக - பாஜ கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதேபோன்று விஜய் விமர்சனம் செய்தால் உடனடியாக பதிலடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ம் தேதி நடந்தது. அப்போது, பேசிய நடிகர் விஜய், ‘தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்த பாஜவுக்கு ஒரு கூட்டணி தேவைப்படுகிறது. அதற்கு, ஒரு ஊழல் கட்சியை மிரட்டி பயணம் செய்யலாம் என நினைக்கிறார்கள். இந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்.

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இன்று எப்படி உள்ளது. அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள்,’ என்று எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார். நடிகர் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக முன்னணி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 82 பேரும் கலந்துகொண்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து பேசினர். அதேபோன்று, தவெக தலைவர் விஜய், அதிமுக கட்சியை ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளதற்கும் மாவட்ட செயலாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இறுதியாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘தமிழகத்தில் அதிமுக - பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி. அதேநேரம், அதிமுக தலைமையில்தான் இந்த கூட்டணி செயல்படும். கூட்டணி ஆட்சி, யார் முதல்வர் என பாஜ தலைவர்கள் கருத்து தெரிவித்து பேசினால், அதிமுக முன்னணி தலைவர்கள் பதில் அளிக்க வேண்டாம். அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

அதேநேரம் நடிகர் விஜய் விமர்சனம் செய்தால், உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் அவர்களுடைய குடும்ப சண்டை. 2026ம் ஆண்டு தேர்தலில் நம்முடைய கூட்டணிக்குதான் அவர்கள் வர வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணியை மேலும் வலுவடைய செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் சிறிய கட்சிகள் இருந்தால், அவற்றை அதிமுகவுடன் கொண்டு வந்து இணைக்கும் பணியில் ஈடுபடுங்கள். 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும். அதற்கான பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

* கண்ணாடி முன்னாடி தான் பேசுவேன்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமைக் கழகத்தில் அதிமுக மாணவர் அணி நிர்வாகிகள், இளம் பேச்சாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ‘‘எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன, எந்த கட்சிக்கும் இப்படிப்பட்ட சோதனைகள் வந்தது கிடையாது. அவ்வளவு சோதனைகளையும் அதிமுக சந்தித்து அந்த தலைவர்களின் ஆசியோடு எதிரிகளை எல்லாம் வீழ்த்தி எவ்வளவோ சோதனைகளை எல்லாம் தாண்டி, எவ்வளவோ பிரச்னைகளை எல்லாம் தாண்டி அதை எல்லாம் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டு ஒரு வலிமையான இயக்கம் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறோம். மேடையில் பேசுகின்ற போது மிகவும் ஜாக்கிரதையாக, எச்சரிக்கையாக பேச வேண்டும். அதற்கு முன்பாகவே நம் வீட்டில் கண்ணாடி முன் நின்று பேசி பழகிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் நாம் பேசும் போது தவறு என்பது புலப்படாது’’ என்றார்.