அதிமுக, பாஜவுடன் கூட்டணிக்கு 0.1 சதவீதம் கூட வாய்ப்பில்லை: ராகுலுடன் விஜய் பேச்சு என்பது வதந்தி: தவெக மீண்டும் திட்டவட்டம்
மதுரை: வாக்காளர் தீவிர திருத்தப்பணியில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து, தவெக சார்பில் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் தலைமையில் மதுரையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்குப் பின் சிடிஆர்.நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: நிறைய இடங்களில் எஸ்ஐஆர் படிவங்கள் குப்பைகளில் போடப்பட்டிருப்பது செய்திகள் மூலம் தெரிகிறது. புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது கோடிக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் இருக்கிறது.
ஓராண்டுக்கு முன்பே இப்பணிகளை முடித்திருக்க வேண்டும். ஒரு மாதத்தில் அவசர அவசரமாக பணியில் ஈடுபட்டு குளறுபடியில் ஈடுபட்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். ‘தமிழக வெற்றிக் கழகத்தை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால் அதிமுகவுடன் இணைந்து கொள்ளுங்கள் என முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகிறார்களே?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘பேசுபவர்கள் அவர்களின் நோக்கத்தை மறந்து பேசுகிறார்கள். எங்களது கொள்கை எதிரி, அரசியல் எதிரிகளை மட்டும் தான் விமர்சித்து பேசி வருகிறோம்.
ஆட்சியில் இல்லாதவர்களை பற்றி நாங்கள் எப்போதும் பேசியது இல்லை. ஆட்சியில் இல்லாத அதிமுகவை பற்றி பேசி மக்களை குழப்ப விரும்பவில்லை. எங்களின் கொள்கை எதிரியான பாஜவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சியுடனும் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் ஏன், 0.1 சதவீதம் கூட வாய்ப்பில்லை. தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர். அவரின் தலைமையை ஏற்று வருபவர்களுடன் தான் கூட்டணி. இதில் எந்த மாற்றமும் இல்லை.
கூட்டணி குறித்து பொதுவெளியில் தவெக தலைவர் அறிவிப்பார். அஜித் மற்றும் விஜய் இருவரும் நல்ல நண்பர்கள், சமீபத்தில் அஜித் அளித்த தெளிவான விளக்கத்திற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று நிர்மல்குமார் தெரிவித்தார். ‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து ராகுல்காந்தியுடன் விஜய் பேசி வருவதாக தகவல்கள் உள்ளதே?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘‘இதுபோன்ற வதந்திகள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அது உண்மையல்ல. கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை எங்கள் தலைவர் விஜய் பொதுவெளியில் தெரிவிப்பார்’’ என்றார். ‘மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசனையும் சந்தித்ததாக கூறப்படுகிறதே?’ என்றதற்கு, ‘‘வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இதுவுமே உண்மையில்லை’’ என்றார்.


