தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலோடு புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுகவில் பாஜக மட்டுமே கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து முடிவு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் கூட்டணி ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு,
அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15ம் தேதி (திங்கள்) முதல் 23.12.2025 செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


