கோவை: அதிமுகவை ஒன்றிணைக்க அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தேன் என்று டெல்லி சந்திப்பு குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் பா.ஜ தலைவர்களை சந்தித்து பேச முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அப்போது அவர், ஹரித்துவார் ராமர் கோயிலுக்கு செல்வதாகவும், மனசு சரியில்லாததால் கோயிலுக்கு சென்று வர இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் டெல்லி சென்ற அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இதன்பின்னர், நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை பீளமேடு விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஹரித்துவார் செல்வதாக உங்களிடம் கூறிவிட்டு சென்றேன். நான் டெல்லி சென்றதும் எனக்கு உள்துறை அமைச்சரை சந்திக்க ஒரு அனுமதி கொடுக்கப்பட்டது.
அதன்மூலமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்கள் அங்கே பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் என் கருத்துக்களை எடுத்து சொன்னேன். இந்த கருத்துகள் அடிப்படையில் இன்றைக்கு பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
அரசியலில் உள்ளவர்கள் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக தங்களுக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது. உள்துறை அமைச்சரை சந்திக்கின்ற போது, அங்கே ரயில்வே துறை அமைச்சர் வந்தார். அவரிடம் ஈரோட்டில் இருந்து செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், முன்கூட்டியே சென்னை புறப்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் நேரத்தை மாற்றி அமைக்கும்படியும் தெரிவித்தேன். உடனடியாக பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆகவே மக்கள் பணி அனைத்தும் செய்வதற்கும், இயக்கம் வலுப்பெறுவதற்கும் தொடர்ந்து பணி ஆற்றுவேன் என்று கூறிக்கொள்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். செங்கோட்டையனிடம் அமித்ஷா சந்திப்பில் வேறு என்ன பேசப்பட்டது என்றும், பதவி பறிக்கப்பட்ட பிறகு தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
* வெளியே ஒன்னு பேசுவோம்...உள்ளே ஒன்னு பண்ணுவோம்...
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட கூடாது என்று அமித்ஷாவே சொல்லிவிட்டார். இதனால் அதிமுக உட்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று பாஜ மாநில தலைவர் நயினார், தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அளித்த பேட்டியில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் செங்கோட்டையனை பாஜ சந்திக்காது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் தான், பாஜ கூட்டணி அமைத்துள்ளது’’ என்று கூறினார்.
ஆனால், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் டெல்லிக்கே சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து, இன்று டிடிவி.தினகரனும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரும் அமித்ஷாவை சந்திக்க செல்கிறார். இவர்களை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனையும் நாளை டெல்லி வரும்படி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருந்து அதிமுகவை உடைக்க பாஜ திட்டமிட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது என்று அரசியல் விமர்சகர்கள், நெட்டிசன்கள் பரபரப்பாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
* உதயகுமார் தொகுதியில் செங்கோட்டையனை ஆதரித்து போஸ்டர்
மதுரை மாவட்டத்தில், மாஜி அமைச்சர் உதயகுமாரின் தொகுதியான திருமங்கலம் பகுதியில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலத்தினை சேர்ந்த செல்வம் என்பவரின் பெயருடன் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ‘‘ஒன்று இணைவோம், வெற்றி பெறுவோம்’’ என்ற தலைப்பில் ‘‘அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்களின் உள்ள குமுறல்களை வெளிப்படுத்திய உண்மை விசுவாசி செங்கோட்டையன் கருத்தை வலுப்படுத்துவோம்.
பத்து நாள் கெடுவுக்குள் எடப்பாடி பழனிசாமி அவர்களே... தானே முன்னின்று தலைவர்கள் உருவாக்கிய கட்சியையும், தொண்டர்களையும் காப்பற்றவேண்டும். இதுவே உங்களுக்கு கடைக்கோடி தொண்டர்களின் கடைசி அழைப்பு’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
* ‘ஆடு நனையுதேனு ஓநாய் அழுகுதாம்’: செங்கோட்டையனை விமர்சித்து போஸ்டர்கள்
பரப்புரைக்காக எடப்பாடி பழனிசாமி நேற்று கோவைக்கு வந்தார். இவரை வரவேற்கும் வகையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக அதிமுக அம்மா பேரவை நிர்வாகிகள் சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘ஆடு நனையுதேனு ஓநாய் அழுகுதாம். நரிகளின் மிரட்டலுக்கு அஞ்சாத மாவீரனே வருக’ என்ற வாசகங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. செங்கோட்டையனை நரி என விமர்சித்து அதிமுகவினரே ஒட்டியுள்ள போஸ்டர்கள், அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
* கோவையில் இருந்து டெல்லி புறப்படும்போது செங்கோட்டையன் அளித்த பேட்டியில், மனக்கஷ்டமாக இருப்பதால் ஹரித்துவார் சென்று ராமரை பார்க்க செல்வதாக கூறினார். ஆனால், ஹரித்துவாருக்கு போகாமல் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளார்.
* பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைவதற்கு முன்பாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள கட்சி அலுவலகத்தை பார்வையிடச் செல்வதாக கூறினார். ஆனால், பல கார்களில் மாறி மாறி சென்று அமித்ஷாவை ரகசியமாக அவர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது செங்கோட்டையன் ஹரித்துவாரில் ராமரை பார்க்க போவதாக கூறிவிட்டு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.