நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் வலுவான கூட்டணி அமையும். அதற்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றார். அப்போது, அங்க பாருங்க கொடி எப்படி பறக்குது என கூட்டத்தினரை பார்த்து சிரித்தபடி கூறினார். அங்கே நடிகர் விஜய்யின் தவெக கொடியை அதிமுக கலர் போட்ட டீசர்ட் அணிந்திருந்த ஒரு வாலிபர் கையில் உயர பிடித்துக் கொண்டிருந்தார். அருகில் அதிமுக கொடியையும் ஒரு தொண்டர் உயரமாக பிடித்துக் கொண்டிருந்தார். தவெக கொடியை அதிமுகவினரை வைத்து பிடிக்க வைத்து, பக்காவாக செட்டப் செய்து, இபிஎஸ் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுகவுக்கு பல தேர்தலில் வெற்றி வாய்ப்பை கொடுத்த சொந்த கட்சியின் அண்ணா இடம் பெற்றுள்ள கொடியைவிட, இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத நடிகர் விஜய்யின் கொடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியது அதிமுகவினரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.
* அதிமுகவினர் மூலம் தவெக கொடியை ஆட்டச் சொன்ன நிர்வாகிகள்
நாமக்கல் மாவட்டம் சானார்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அங்கு சிலர் அதிமுக, பாஜ கூட்டணிக் கட்சிகளின் கொடிகளை கையில் வைத்திருந்தனர். மூன்று பேர் தவெக கொடியை கூட்டத்தில் ஆட்டிக் கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் அதிமுக கூட்டணிக்கு தவெக வருவதுபோல எடப்பாடி பேசினார். இதனால் நேற்று அவர் பேசிய கூட்டத்திற்கும் அதிமுகவினர் தவெக கொடியுடன் வந்தனர். ஆனால், தவெகவினரே கூட்டத்துக்கு விரும்பி வந்ததுபோல செட்டப் செய்வதற்காக அதிமுக நிர்வாகிகளே ஏற்பாடு செய்திருப்பதாக அதிமுகவினரே கூறுகின்றனர்.