அதிமுக கூட்டணி உறுதியான பின் முதல்முறையாக கோவை வருகை; மோடியுடன் எடப்பாடி, வாசன் இன்று சந்திப்பு: டிடிவி, ஓபிஎஸ், சசிகலா விவகாரம் குறித்து முக்கிய பேச்சு
கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டினை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அப்போது மோடியை எடப்பாடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக இணைய வேண்டும் மற்றும் கூட்டணி விவகாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம் சத்யசாய் புட்டபர்த்தி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். மதியம் 1.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் செல்கிறார். அங்கு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.25 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார்.
பின்னர் 3.30 மணி விமானம் மூலம் கோவையில் இருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு டெல்லி செல்கிறார். மாநாட்டில் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி திட்டத்தின் கீழ் 21வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி தொகையை விடுவித்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவோர், விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்கள் விநியோகிப்போர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் கோவை வருகையையொட்டி விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் பங்கேற்கும் கொடிசியா வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை 72 மணி நேரத்திற்கு மாநகரம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கோவையில் 2 மணி நேரம் மட்டுமே உள்ளதால் ஓட்டலில் சந்திக்க வாய்ப்புகள் குறைவு. எனவே, விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள விஐபி ஓய்வறையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் அதிமுக-பாஜ கூட்டணி அமைந்த பின்னர் முதல் முறையாக பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக இணைய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதே கருத்தை பாஜ தலைவர்களுக் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எடப்பாடியோ பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார்.
எனவே, இந்த விவகாரம் குறித்து எடப்பாடி-மோடி சந்திப்பில் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பின் போது கூட்டணி மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. இதுதவிர, பிரதமர் மோடியை சந்திக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாரிவேந்தர் ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* மோடியுடன் சந்திப்பா? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்
பிரதமர் மோடியை சந்திக்க செங்கோட்டையன் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நெல்லை வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள வஉசி சிலைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவரிடம், நாளை (இன்று) கோவை வரும் பிரதமர் மோடியை சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன் ‘சஸ்பென்ஸ்’ (ரகசியம்) என ஒரே வார்த்தையில் கூறிவிட்டு சென்றார்.
* விவசாய மாநாட்டில் பங்கேற்க பாஜ விவசாய அணி எதிர்ப்பு
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யக்கோரி பிரதமர் மோடியையும், ஒன்றிய அரசையும் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் டெல்லி, பஞ்சாப், தமிழகத்தில் சென்னை மற்றும் டெல்டாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பி.ஆர்.பாண்டியன் ஒருங்கிணைப்பாளராக உள்ள தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 3 நாட்கள் கோவையில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது.
இதை பிரதமர் மோடி துவக்கி வைத்து விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார். ஆனால், இதே விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது சந்தித்து பேசாத பிரதமர் மோடி, அன்று அவர்களை கைது செய்தார். தற்போது, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், திடீரென விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கிறார். இதற்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்திய பி.ஆர்.பாண்டியன் மாநாட்டில் மோடி ஏன் பங்கேற்க வேண்டும் என பாஜ விவசாயிகள் அணி தலைவர் கோவை நாகராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். கட்சி சார்பில் விவசாய அணி இருக்கும்போது, தங்களுக்கு எதுவுமே தெரியப்படுத்தாமல் எதற்கு பங்கேற்க வேண்டும் என கேள்வி எழுப்பி பிரதமர் அலுவலகத்துக்கு தொடர் கடிதங்களை நாகராஜ் அனுப்பினார்.
இதேபோல், பாஜ விவசாய அணியை சேர்ந்த நிர்வாகிகளும் கடிதங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினர். இதையடுத்து, இந்த மாநாட்டை விவசாய கூட்டமைப்பும், பாஜவும் சேர்ந்து நடத்த பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. அதன்படி, பாஜ மற்றும் விவசாய கூட்டமைப்பு சேர்ந்து மாநாட்டை நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து மாநாடு பேனர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.


