Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக-பாஜ கூட்டணி ரத்தக்கறை படிந்த கம்பளம் எடப்பாடி அழைப்பை நிராகரிக்கிறோம்: முத்தரசன் பேட்டி

சென்னை: எடப்பாடியின் கூட்டணி அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த அதிமுக ஆட்சி பாஜவின் பிடியில் இருந்தது. எடப்பாடி கோவையில் பேசுகிற போது, கம்யூனிஸ்ட்களே இல்லை. அவர்களுக்கு முகவரியே இல்லை. அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என பேசி உள்ளார்.

ஆனால், இந்த ஒரு வார இடைவெளியில் அவருக்கு என்ன அறிவு வந்ததோ என தெரியவில்லை. ஒருவேளை சிதம்பரம் வந்ததால் நடராஜனிடம் ஆசி பெற்று சொன்னாரா என தெரியவில்லை. விசிக, கம்யூனிஸ்ட்கள் எங்கள் அணிக்கு வரவேண்டும் என சொல்லியுள்ளார். இது ஒரு நல்ல நகைச்சுவை. எங்கள் கூட்டணிகளை ரத்தின கம்பளங்களை விரித்து வரவேற்போம் என சொல்லியுள்ளார். ஏற்கனவே பாஜ அந்த அணியில் உள்ளது. இது ரத்தின கம்பளம் கிடையாது.

ரத்தக்கறை படிந்த கம்பளம் அது. அந்த ரத்தக்கறை படிந்த கம்பளத்தில் எடப்பாடி பயணம் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி தெளிவாக ஒரு விசயம் சொல்ல வேண்டும். தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கம் யாருக்கு.. ஒன்றிய அரசு பச்சையாக தமிழ்நாடு அரசுக்கு துரோகம் விழைக்கிறது. இதை எடப்பாடி கேட்க வேண்டும். தேசிய கல்விகொள்கையை அதிமுக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? இதை எடப்பாடி தெளிவாக சொல்ல வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு குறித்து எடப்பாடி நிலை என்ன? நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது.

இது எடப்பாடிக்கே தெரியும். இது குறித்து எடப்பாடியின் நிலை என்ன என்பதை சொல்ல வேண்டும். கலைஞர் இருக்கும்போது பாஜவோடு திமுக கூட்டணி வைத்தது. அதன்பிறகு விலகினார்கள். அதன் பிறகு கலைஞர் சொன்னார் பாஜ ஒரு ஆக்டோபஸ் மாதிரி, இது 1000 கால்களை கொண்டிருக்கும், எல்லாவற்றையும் வளைத்து அழித்து விடும் என்று சொல்லி விலகினார். அதேபோல், ஜெயலலிதா பாஜவுடன் கூட்டணியில் இருந்தார். அந்த ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். அதன்பிறகு இனி பாஜவோடு கூட்டணி இல்லை என தெளிவாக சொன்னார்.

அதேபோல் எடப்பாடி காலத்தில் பாஜவோடு கூட்டணி வைத்து, பின்னர் இனி பாஜவோடு கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது பாஜவோடு உறவு வைப்பதற்கு என்ன காரணம் என எடப்பாடி தெளிவாக சொல்ல வேண்டும். அதிமுக சேர கூடாத இடத்தில் சேர்ந்துள்ளது. தமிழகத்திற்கு பாஜவால் பேராபத்து ஏற்பட போகிறது. கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணி அழைத்த எடப்பாடியின் கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.

உங்கள் கூட்டணி ஒப்பேராத கூட்டணி. திமுக கூட்டணியில் அமைந்துள்ள கூட்டணி தேர்தல் கூட்டணிக்காக உருவான கூட்டணி இல்லை. கொள்கைகாக உருவான கூட்டணி. அதிமுக -பாஜ கூட்டணி நீடிக்க வாய்ப்பே இல்லை. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார். ஏற்கனவே எடப்பாடி விடுத்த அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிராகரித்த நிலையில், தற்போது முத்தரசனும் நிராகரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.