ஈரோடு: நாளை மறுநாள் எனது கருத்தை சொல்வேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்து திரும்பிய பின்னரே அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பும் வெளியானது.
எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதனிடையே கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்து வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாளை மறுநாள் அதாவது 5ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; 5ம் தேதி கட்சி அலுவலகத்தில்தான் கூட்டத்தை வைத்திருக்கிறேன். என்னுடைய கருத்தை செல்வேன். நாளை மறுநாள் 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து கருத்தை சொல்கிறேன். அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன். கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை. ஆதரவாளர்கள் விருப்பப்பட்டு தானாக என்னுடன் வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.