Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போஸ்ட்...டெலிட்...போஸ்ட்... செங்ஸ் புரோ... வாட் புரோ... இட்ஸ் ராங் புரோ....அதிமுக தவெக டிஸ்யூம் டிஸ்யூம்: ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

கோபி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த வாரம் தவெகவில் இணைந்தார். இது அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் செங்கோட்டையனின் கடந்த கால நடவடிக்கைகள், செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் பற்றி கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர்.

கோபியில் உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பாக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் தவெக பெயர் பலகையை செங்கோட்டையன் வைத்தார். இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்து உச்சகட்ட கோபமடைந்த அதிமுகவினர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பயன்படுத்துவதற்கான தகுதியை இழந்து விட்டதாகவும், கழகத்தின் துரோகி, பதவி வெறி இன்னும் அடங்கவில்லையா என பல்வேறு விமர்சனங்களை கொட்டி தீர்த்து வந்தனர்.

இந்நிலையில், கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்து தனது முகநூலில் நேற்று முன்தினம் வாழ்த்து போஸ்டர் ஒன்றை செங்கோட்டையன் பதிவிட்டிருந்தார். அந்த போஸ்டரில், கட்சியின் கொள்கை தலைவர்கள் படங்கள் மட்டுமின்றி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய், புஸ்சி ஆனந்த் படங்களும் இடம் பெற்றிருந்தது. புஸ்சி ஆனந்த் படத்தை போட்டு எல்லாம் அரசியல் செய்ய வேண்டிய நிலை இருக்கு. நம்ம அனுபவத்திற்கு இது தேவையா. வெட்கமாக இல்லையா செங்ஸ். எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் ஓட்டு கேட்க சென்றால் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்றும் பல்வேறு கமென்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த செங்கோட்டையன் விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாமல் நேற்று காலை முகநூல் பக்கத்தில் இருந்த கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டரை நீக்கினார். அதிமுகவினரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்த செங்கோட்டையனுக்கு அடுத்த இடியாக தவெக தரப்பில் இருந்து வந்து விழுந்தது. பதிவு நீக்கப்பட்டதை அறிந்த தவெகவினர் மீண்டும் முகநூலில் பதிவிடுமாறு அழுத்தம் கொடுத்தனர்.

‘செங்ஸ் புரோ.... இட்ஸ் ராங் புரோ...’ அதிமுகவினர்க்கு பயந்து நீக்க வேண்டுமா என சமூக வலைதளங்களில் வருத்தெடுத்தனர். வேறுவழியின்றி மீண்டும் அதே போஸ்டரை 3 மணி நேரம் கழித்து தனது முகநூல் பக்கத்தில் செங்கோட்டையன் பதிவிட்டார். ஆனாலும் சமாதானம் அடையாத தவெகவினர் சிலர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் புகைப்படம் சிறியதாக இருப்பதாக அக்கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

நீக்கப்பட்ட போஸ்ட் மீண்டும் பதிவிட்டதை அறிந்த அதிமுகவினர் பழைய படி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். போஸ்ட் செய்தாலும் விமர்சனம், நீக்கினாலும் விமர்சனம் என தொடர்ந்து கேலி, கிண்டல்களுக்கு செங்கோட்டையன் ஆளாகி வருவது அவரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

* ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்புக்கு அழைப்பு

இன்று (5ம் தேதி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெ. உருவ படத்திற்கு தவெக சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக செங்கோட்டையன் தரப்பில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் பயன்படுத்துவதை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் ஜெயலலிதா நினைவு நாளில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள நிகழ்ச்சி அதிமுக மற்றும் தவெகவினரிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.