சென்னை: தனது ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; அதிமுக வெற்றி பெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். 2009ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியதில்லை. ஆனால் இன்று என்னை சுற்றியுள்ளவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி கேட்கவில்லை. எல்லாவற்றுக்கெல்லாம் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி ஏன், கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதல்வர் ஆகி இருக்க முடியாது. ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர்த்தவில்லை. நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி இருக்க முடியாது. தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் பழனிசாமி செய்யவில்லை. நான் தொகுதி மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. எனக்கு எடப்பாடி பழனிசாமிதான் அமைச்சர் பதவி கொடுத்தார் என்பது வேதனை அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. தன்னை முதல்வராக்கிய சசிகலாவை கொச்சையாக பேசினார் எடப்பாடி பழனிசாமி. கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. பணம் செலவு செய்தால் போதும் என்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தவர் யார்?. டி.டி.வியின் 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடுதான் பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்தது.
அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழற்றிவிட்டார் எடப்பாடி. பாஜகவுடன் 2026 தேர்தலிலும் அதற்கு பின்னரும் கூட்டணி இல்லை என்று கூறியவர் எடப்பாடி. அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த பாஜகவுடன் 2024ல் கூட்டணியை முறித்துக்கொண்டார். கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது என்று எடப்பாடி கூறிய பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஒற்றுமையாக இருந்தால் கூட்டணிக்கு நம்மை நாடி வருவார்கள். முன்னேற வேண்டும் என்றால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும், பிறர் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது. என்னை திமுகவின் 'பி' டீம் என்று சொல்ல எடப்பாடிக்கு தகுதியில்லை. ஒருமுறை கூட எனக்கு என்ன குறை என்று எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. கட்சியில் கருத்துகள் பரிமாறுவது ஜனநாயக உரிமை. அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கிக் கொண்டே இருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும் என அவர் தெரிவித்தார்.

