அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது என்றால் மக்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்..? அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு
சென்னை: தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 10 தேர்தல்களில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும் தோல்விசாமி, ’210 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என பொதுக்குழுவில் கிச்சு மூச்சு மூட்டியிருக்கிறார். சிறப்பான ஆட்சியை கொடுத்தோம் என அவரே சர்டிபிகேட் கொடுத்துக்கொள்கிறார். பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க் கட்சியினர் மீது அவதூறு வழக்குகள், விவசாயிகள் மீது அடக்குமுறைஎன எத்தனை எத்தனை கொடுமைகள் நடைபெற்றன. இதையெல்லாம் மறைத்துவிட்டு, ’சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’ எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார்.
பழனிசாமி சொல்வது போலவே அது சிறப்பான ஆட்சி என்றால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மக்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்கி தமிழ்நாட்டைக் கற்காலத்திற்கு இழுத்துச் சென்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி. அது பொற்கால ஆட்சி அல்ல. தமிழ்நாட்டின் இருண்டகால ஆட்சி.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வோடு கூட்டு சேர்ந்து அதிமுக நின்றிருந்தாலும் திமுக கூட்டணியை வென்றிருக்க முடியாது, இனியும் வெல்ல முடியாது என்பது தமிழ்நாட்டில் நேற்று பிறந்த பிஞ்சுக் குழந்தைக்குக் கூட தெரியும். நிலைமை இப்படியிருக்க நீங்கள் அடித்து விடும் பொய்க்கணக்கை அதிமுகவினரே நம்பமாட்டார்கள்.


