நெல்லை: விடுதலைசிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நெல்லையில் அளித்த பேட்டி: பாஜ தனது தேசியவாத அரசியலை முன்னிறுத்தி மாநில கட்சிகளை பலவீனப்படுத்துகிறது. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுகவை பாஜ பலவீனப்படுத்தி வருகிறது. ஒரு கட்சி நிர்வாகியை நீக்கினால் அந்த கட்சி பொதுச்செயலாளரை சந்திக்க வேண்டும். ஆனால் அதிமுகவில் செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டதும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கிறார்.
இதில் இருந்தே அகில இந்திய அண்ணா திமுகவின் தமிழக பொதுச்செயலாளராக இபிஎஸ்சும், தேசிய தலைவராக அமித்ஷாவும் செயல்படுகிறார்கள் என தெரிகிறது. திமுகவை வீழ்த்துவதே பாஜ இலக்கு என்ற நோக்கத்துடன் பாஜவின் ஓட்டுக்குழுக்களாக விஜய், சீமான் கட்சிகள் செயல்படுகின்றன. 2026 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு கூறினார்.