சென்னை: அதிமுக எம்.பி தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதுரை, அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் தமிழகத்தின் கரூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான தம்பிதுரை தற்போது மக்களவை துணை சபாநாயகராக பணியாற்றிவருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தொடர் பயணம், கட்சி கூட்டங்களில் ஈடுபட்டு இருப்பதின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
