Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

சென்னை: அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17.10.2025 வெள்ளிக் கிழமையன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2025, 18.10.2025 ஆகிய இரண்டு நாட்கள் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 54-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள். அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும்; உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.10.2025 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில், கழகத்தின் 54வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதன் விபரங்களையும்; கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் குறித்த விபரங்களையும்; அதே போல், தங்கள் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் விபரங்களையும் தலைமைக் கழகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.