அதிமுக கொடியுடன் கள்ளழகரை வைத்து எடப்பாடிக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு: ஆன்மிக ஆர்வலர்கள், மக்கள் கடும் கண்டனம்
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மாலை மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‘‘நம்ம ஆட்கள் யாரும் டாஸ்மாக்கிற்கு போக மாட்டோம் என நம்புறேன்’’ என கூறியபோது, கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து பேசிய அவர், ‘‘தீபாவளிக்கு தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து மத்திய தொகுதிக்கு உட்பட்ட டிஎம் ேகார்ட் சந்திப்பு பகுதியிலும், மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓபுளாபடித்துறை பகுதியிலும் பேசினார். ஓபுளாபடித்துறை பகுதிக்கு வந்த எடப்பாடிக்கு, மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது நடப்பதைப் போல கள்ளழகர் குதிரையில் வருவதைப் போன்ற மாதிரியை அதிமுக கொடியுடன் கொண்டு வந்து வரவேற்றனர். மேலும், ஆற்றில் இறங்கிய கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுவதைப் போலவும் எடப்பாடி வந்த வாகனத்தின் மீது சிலர் தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளித்தனர்.
அதேபோல், கள்ளழகருக்கு அதிமுக கொடி வண்ணத்தில் மாலை அணிவிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஆன்மீக ரீதியாக நடக்கும் திருவிழாவை அரசியல் ரீதியாக செய்ததற்கு ஆன்மீக அன்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.