அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை எப்படி மீட்பார்? பாஜவின் ஒரிஜினல் வாய்சாக மாறிய எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
திருவாரூர்: தமிழ்நாட்டையும், மக்களையும் டெல்லியில் அடகு வைத்து விட்டார். பாஜவின் ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே எடப்பாடி பழனிசாமி பேச ஆரம்பித்துவிட்டார் என திருவாரூரில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்எஸ் நகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.846.47 கோடி மதிப்பில் 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது முதல்வர் பேசியதாவது:
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு திட்டங்களை எந்த அரசும் செய்திருக்காது. இதையெல்லாம் பார்த்து, தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இப்போது என்ன செய்கிறார்? தமிழ்நாட்டை மீட்போம் சாரி, தமிழகத்தை மீட்போம் என்று ஒரு பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஏனென்றால், தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று சொல்லுகின்ற கூட்டத்துடன், இப்போது அதிமுகவை சேர்த்துவிட்டார். அதிமுகவை மீட்க முடியாத இவர் தமிழகத்தை மீட்கப்போகிறாராம்.
பழனிசாமி அவர்களே, உங்களிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது. கூவத்தூரில் ஏலம் எடுத்து, கரப்ஷன், கலெக்ஷன்,கமிஷன் என்று தமிழ்நாடே பார்க்காத அவலமான ஆட்சியை நடத்தினீர்கள், கொஞ்ச நஞ்சமல்ல, செய்த குற்றங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, பாஜவிடம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழர்களையும், அவர்களின் உரிமைகளையும் அடகு வைத்தீர்கள். நீங்கள் செய்த கேடுகள் ஒன்றா, இரண்டா? உங்களுக்கு தெரிந்தது எல்லாம், துரோகம் செய்வது மட்டும் தான். உங்களை கொண்டு வந்தவருக்கு துரோகம் செய்து, வெளியில் அனுப்பினீர்கள், உங்களை நம்பி வழங்கப்பட்ட கட்சிக்கும், அந்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்து, கூட்டணி வைத்தீர்கள்.
தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எப்படி உங்களால் கூச்சமே இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது?.அதுமட்டுமல்லாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. சமீபத்தில் கூட என்ன பேசியிருக்கிறார்? இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பள்ளி, கல்லூரி கட்டக்கூடாதாம். இதற்கு முன்னால், பாஜவுக்கு வெறும் ‘டப்பிங் வாய்ஸ்’தான் பேசிக்கொண்டு இருந்தார். இப்போது, பாஜவின் ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச ஆரம்பித்துவிட்டார்.
இந்துசமய அறநிலையத்துறையை பொறுத்தவரைக்கும், தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகளின் பட்டியல் பெரியதாக இருக்கும். நான் பழனிசாமியை நேரடியாகவே கேட்கிறேன். ஏன் படிப்பு என்றால், உங்களுக்கு அவ்வளவு கசக்கிறது? கல்விக்காக உண்மையிலேயே குரல் எழுப்புவது போன்று இருந்தால் கும்பகோணத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டமியற்றி அனுப்பி வைத்தோம்.
இரண்டு மாதம் ஆகியிருக்கிறது. அதற்கு ஆளுநர் இதுவரையில் அனுமதி தராமல் இருக்கிறார். நான் கேட்டேன். இதை விட ஆளுநருக்கு என்ன வேலை? இதற்காக குரல் எழுப்ப எதிர்க்கட்சி தலைவருக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? நீங்கள் ஒன்றிய அரசிடம் கேட்டாலும், கேட்காவிட்டாலும், நாங்கள், உறுதியோடு சொல்கிறேன் சட்டரீதியாக எதிர்கொண்டு, கலைஞர் பல்கலைக்கழகத்தை நிச்சயமாக, உறுதியாக அமைப்போம்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அவர்களே, மக்களுக்கு எதிரான கருத்துகளை பேசிக்கொண்டு, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகங்களை செய்து கொண்டு, மக்களை எப்படியாவது ஏமாற்றி விடலாம் என்ற நப்பாசையோடு நீங்கள் என்ன பயணம் செய்தாலும், மக்கள் ஒருபோதும் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால், அதுதான் உங்கள் டிராக் ரெக்கார்ட் துரோகங்கள்தான் உங்கள் ஹிஸ்டரி.
தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். மக்களான நீங்கள், எங்களோடு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று ஒற்றுமையாக நிற்க வேண்டும். நம்முடைய மண், மொழி, மானம் காக்க, என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், மண்ணின் மைந்தனான கலைஞரின் கொள்கை வாரிசான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் துணை நிற்போம், துணை நிற்போம், என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘கொடுத்த காசுக்கு மேல் கூவுவதால் பாஜவினரே ஆச்சரியப்படுகிறார்கள்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு சட்டம் இருக்கிறது, இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி தான் முதலமைச்சராக இருந்தீர்களோ என்று எனக்கு புரியவில்லை. மறைந்த பக்தவத்சலம் காலம் தொடங்கி, ஏன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, பழனிஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரியை திறந்திருக்கிறார். அந்த கல்லூரிக்கு கூடுதல் கட்டிடத்தை சென்ற முறை நீங்களே திறந்து வைத்திருக்கிறீர்கள்.
அப்போது ஏதாவது மயக்கத்தில் போய் திறந்து வைத்துவிட்டு வந்தீர்களா? இப்போது நாங்கள் கல்லூரி தொடங்கினால் தவறா? பாஜ தலைவர்களே இதுபோன்று, “கல்லூரி தொடங்கக்கூடாது” என்று பேசுவது இல்லை. ஆனால், பழனிசாமி மட்டும் பேசுகிறார். இதை பார்த்தால் ஒன்று தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒரு திரைப்படத்தில் வடிவேலு காமெடி ஒன்று வரும், அது என்னவென்றால், “கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான்” அந்த மாதிரி பாஜ காரங்களே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், “கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, பாஜ கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “பீல் பண்ணிக் கூவும்” எதிர்க்கட்சித் தலைவர். கேள்விக்குறிபோல் வளைந்த முதுகா? உரிமைகளுக்காக தலைநிமிர்ந்து போராடும் தன்மானமா?. மனிதரை மனிதர் தாழ்த்தி, பிற்போக்குத்தனங்களை நோக்கித் தள்ளும் காவிக் கொள்கையா? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என முற்போக்கு எண்ணங்களால் முன்னேற்றும் கல்விக் கொள்கையா?. தமிழ்நாடு விடை சொல்லும்! துரோகக் கூட்டத்தை விரட்டியடிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
* சமூகநீதி விடுதியில் ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை திருவாரூரிலிருந்து நாகை செல்லும் வழியில் கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் இயங்கி வரும் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சமூகநீதி விடுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், விடுதியில் இருந்து வரும் வசதி, கூடுதலாக என்ன வசதி வேண்டும், கல்லூரியில் பேராசிரியர்கள் எப்படி பாடம் கற்பிக்கிறார்கள் என்பது குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
* வீடு வீடாக பிரசாரம்
திருவாரூர் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் இந்த ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியில் திமுகவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூரில் நேற்று 2வது நாளாக தனது களஆய்வு பணியினை துவக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் வீடு வீடாக கட்சியினர் மூலம் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியினை ஆய்வு செய்து இந்த பணி எதற்காக நடைபெற்று வருகிறது என்று பொதுமக்களிடம் விளக்கினார்.