நாமக்கல்: நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட மக்கள் கோரிக்கை மற்றும் தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது.
முன்னதாக கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில், உள்நாட்டு தொழில்களை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமையால் விசைத்தறி தொழிலாளர்கள் உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சிறப்பு குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்கும், விசைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்குமா என்பதை, அக்கட்சியின் தலைவர் விஜய் தான் தெளிவுபடுத்த வேண்டும். தன்னுடைய அணிக்கு தவெகவை கொண்டு வர வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்குகின்ற தந்திரத்தோடு தான், எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டங்களில் தவெக கொடி காணப்படுவதாக பேசியிருக்கிறார். தவெக, அதிமுகவுடன் கூட்டணி என்றால், பாஜவை அதிமுக நிராகரிக்கிறதா என்பதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். தவெக தரப்பிலிருந்து இதுவரை கூட்டணி குறித்து எந்த தகவலும் வெளி வராத நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றே நாங்கள் இதை பார்க்கிறோம்.
தமிழ்நாடு அரசின், தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படும் என்ற முடிவு வரவேற்கத்தக்கது. சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதலான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். கட்சி ஆரம்பித்து, 3வது நாளே முதல்வர் ஆக வேண்டும் என்று கூறும் கட்சி நாங்கள் அல்ல. எங்களது பலம் குறித்து எங்களுக்கு தெரியும். அதற்கு உட்பட்டு செயல்படுவோம். இவ்வாறு சண்முகம் கூறினார்.