Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் திரையுடன், 8 இடங்களில் ஏஐ கேமரா

கோவை: புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க திரையுடன், 8 இடங்களில் ஏஐ கேமரா பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தை கடந்த 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அவிநாசி ரோட்டில் பல வருடங்களாக நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு முழுமையான தீர்வு கிடைத்தது. இதற்கிடையே உப்பிலிபாளையம் ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் திணறி வந்தனர்.

போக்குவரத்து போலீசார் உப்பிலிப்பாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வந்தது. மேலும், வாகன ஓட்டிகளுக்காக மேம்பாலத்தின் இருபுறத்திலும் ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் எங்கெங்கு உள்ளன, எத்தனை தூரத்தில் உள்ளது, எந்த சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பது போன்ற அறிவிப்பு பலகைகள் இரு புறமும் வைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இருப்பினும் மேம்பாலத்தில் சில வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால், மெதுவாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து பாலத்தில் வேகம் 30 கி.மீ. என போலீசாரால் நிர்ணயிக்கப்பட்டது. 30 கி.மீ. வேகத்தை தாண்டி வேகமாக பாலத்தில் சென்றால் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மேம்பாலத்தில் வேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் பாலத்தில் அமைக்கப்பட உள்ள திரையில் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறியதாவது: மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து, மாநகர போலீசார் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்க அனைத்து இறங்கு தளங்களிலும் மாநில நெடுஞ்சாலைத் துறை வேகத்தடைகளை (ரம்பிள் ஸ்ட்ரிப்) அமைத்துள்ளது. மேம்பாலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் 8 இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவ மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளில் சிலர் அதிக வேகத்தில் பயணிப்பதால், ஏறுதளங்களில் ஏறும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இது விபத்துக்கு வழிவகுக்கும். இந்த விதிமீறலை தடுக்க, ஏஐ அடிப்படையிலான கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. இந்த கேமராக்கள் வேகம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களை கண்டறியும். மேலும், மேம்பாலத்தில் திரை பொருத்தப்பட்ட உள்ளது. இந்த திரையில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன பதிவு எண் திரையில் காண்பிக்கும். இவற்றை பொருத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.