Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

நாடு முழுவதும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஏஐ’ பாடம் அறிமுகம்

நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, கேவிஎஸ், என்விஎஸ் பிரதிநிதிகள், நிபுணர்கள் பங்கேற்றனர். மேலும், ஏஐ மற்றும் சிடி பாடங்களைப் பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் குழுவை சிபிஎஸ்இ அமைத்தது.

இதுகுறித்து மத்தியப் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் சஞ்சய் குமார் தெரிவிக்கையில், ‘‘நம்மைச் சுற்றி உள்ள இந்த உலகத்தில் செயற்கை நுண்ணறிவு கல்வியை அடிப்படை திறனாகக் கருதவேண்டும். இதை முன்னிட்டு ஏஐ தொடர்பான பாடத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தேசியக் கல்வித் திட்டத்துடன் தொடர்புள்ளதாக மாற்றப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இது வழிவகுக்கும்’’ என்றார். இதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3ஆம் வகுப்பில் இருந்தே ஏஐ மற்றும் சிடி பாடங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம் தீவிர சிந்தனை, படைப்பாக்கம், செயற்கை நுண்ணறிவைச் சரியான நெறிமுறைகளுடன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்க முடியும். இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி, மற்றும் வீடியோக்கள் உட்பட பாடத்திட்டங்கள் உதவிகரமாக இருக்கும். ஏஐ கல்வித் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ இணைந்து செயல்படும். 3ஆம் வகுப்பில் இருந்தே ஏஐ பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதால், 21ஆம் நூற்றாண்டில் சிக்கல்களுக்கு தீர்வு, ஆராய்ச்சி, கணக்கீட்டுத் திறன்போன்றவற்றில் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இத்திட்டம் 2026-27 கல்வி ஆண்டில் அறிமுகமாகும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.