Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்திற்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 டிரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தின் தலைமை விமானியாக இருந்த கேப்டன் சுமீத் சபர்வால் உட்பட 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானியின் தவறு காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், விசாரணை தொடர்பான சில தகவல்கள் மட்டும் ஊடகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கசியவிடப்பட்டதால், விமானி சுமீத் சபர்வாலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த விமானி சுமீத்தின் 91 வயது தந்தை புஷ்கரராஜ் சபர்வாலும், இந்திய விமானிகள் கூட்டமைப்பும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், விபத்து குறித்து சுதந்திரமான நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஜி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான விமானியின் தந்தையிடம், ‘விபத்துக்கான பழியை நீங்கள் ஒரு சுமையாகச் சுமக்க வேண்டாம்’ என நீதிபதிகள் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் நீதிபதி சூர்யா காந்த், ‘இந்த விபத்து விமானியால் நடந்ததாக யாரும் கூறவில்லை’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். முதற்கட்ட அறிக்கையில் விமானி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், சில ஊடகங்களில் வெளியான தரம் தாழ்ந்த செய்திகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது அமைப்பு சார்ந்த பிழைகளை ஆராயாமல், ஒட்டுமொத்த விசாரணையும் விமானிகள் மீது மட்டுமே கவனம் செலுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஒன்றிய அரசும், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகமும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.