புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 260 பேர் பலியாகினர். முதற்கட்ட விசாரணை அறிக்கையில், என்ஜின்களுக்கு எரிபொருளை வழங்கும் சுவிட்ச்கள் செயலிழந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் பேரில், ஏர் இந்தியா நிறுவனம், அதன் போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தியது. இது தொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் வெளியான தகவல்களின்படி,’ ஆய்வுகளின்போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டில் எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், ஆய்வுகளைத் தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடித்தோம். இதுகுறித்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.