டெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12 அன்று மதியம் 1.39 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. லண்டன் செல்லும் விமானத்தில் 241 பேர் இறந்தாலும், ரமேஷ் என்ற பயணி அதிசயமாக உயிர் தப்பினார். மருத்துவக்கல்லூரி மீது விமானம் மோதியதில் அங்கு இருந்த ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 29 பேர் பலியானார்கள்.
விபத்து பற்றி விமானப் படை, எச்.ஏ.எல். அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் குழு புலனாய்வு செய்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு ஒன்றிய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முதற்கட்ட அறிக்கையை விசாரணைக் குழு சமர்ப்பிக்கப்பட்டது.
விமான விபத்துக்கான காரணம் 4 - 5 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் ஒன்றிய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் 2 வாரத்தில் விபத்து குறித்த இறுதி அறிக்கையை புலனாய்வு வாரியம் அளிக்கும் என கூறப்படுகிறது.