Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழி காட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: விவசாய பணிகளில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்கி அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

தமிழ்நாட்டில் தற்போது விவசாய பணிகளில் பெரும்பாலான பொறியியல் படித்த இளைஞர்கள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி செய்துவிட்டு தாயகம் திரும்பிய இளைஞர்களும் விவசாயப் பணியில் ஆர்வம் காட்டி அவர்களது பூர்வீக நிலங்களைக் கொண்டும், விலைக்கு நிலங்களை வாங்கியும் மற்றும் குத்தகைக்கு நிலங்களை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆர்வமுடன் விவசாயத்தை மேற்கொள்ளும் இந்த இளைய தலைமுறை குறிப்பாக இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி செயல்படுத்தி வருகின்றனர் மற்றும் கூட்டுபண்ணை முறையில் விவசாயத்தை மேற்கொண்டும் வருகின்றனர். இந்தத் தன்னார்வ முயற்சியில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் வேளாண்மை, தோட்டகலைத் துறை மற்றும் கால்நடைத் துறை சார்பில் ஆதரவு அளித்து முறையான வழிகாட்டுதலும் இருந்தால் இந்த இளைஞர்கள் விவசாயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்து லாபகரமாக பொருளாதாரத்தைப் பெற்று வருங்காலத்தில் பல இளைஞர்களை விவசாயத் தொழிலுக்கு கொண்டு வர முன்னோடிகளாக இருந்து தமிழகத்தில் விவசாயம் நீண்ட காலம் நிலைத்திருக்க வழிவகை செய்யவார்கள்.

விவசாயத் தொழிலில் ஈடுபடுகின்ற பட்டதாரி இளைஞர்களுக்கு விவசாய விளைபொருட்களின் மதிப்பு கூட்டு திறன் சார்ந்த பயிற்சி மற்றும் விவசாய இயந்திரகள் மூலம் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் எளிய முறையில் பயிர் சாகுபடி செய்வதற்கான பயிற்சியும், கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் மூலம் கால்நடைகளைப் பராமரிப்பது, வளர்ப்பது அதற்கான சிறந்த அமைவிடங்கள், நோய் தொற்று இன்றி பாதுகாப்பதும், பண்ணை குட்டை முலம் மீன் வளர்ப்பு போன்ற பயிற்சிகளை தமிழக அரசு ஒரு கூட்டு பயிற்சியாக ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு வழங்கிட ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பல இடங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்கள் பாரம்பரிய நெல் பயிர்களை கண்டறிந்து அவற்றை பயிர் செய்கின்றனர். அவைகளுக்கு சந்தையில் நல்ல விலை மதிப்பு கிடைப்பதற்கும், அந்த நெல்லை எளிய முறையில் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள், வேளாண் நுகர் பொருள் வாணிப கழகங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

விவசாயம் சார்ந்த இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்பதற்கான சிறிய தொழில் நிலையங்களை உருவாக்குவதற்கு இளைஞர்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை, தொழில் மேம்பாட்டுத் துறை வழிகாட்டி மானியங்களுடன் கடன் உதவிகளை அளித்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். பசுமை நிலங்களில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும்.

விவசாயத்தில் ஆர்வமாக விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு அந்தந்த பகுதி வேளாண்மை, தோட்டகலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத் துறை மூலம் புதிய, லாபகரமான முன்னோடி விவசாயம் செய்யும் பகுதிகளுக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு அழைத்துச் சென்று எளிய முறையில் குறைந்த முதலீட்டில் அதிக பொருளாதார லாபம் அடைவதற்கான விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும். இதற்காக இளைஞர்களால் வேளாண்மை மேம்பாட்டு திட்டம் போன்ற ஒரு திட்டத்தை தமிழக வேளாண்மைத் துறை கூட்டுக் குழுவாக செயல்பட்டு உடனடியாக நிறைவேற்றி விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களின் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.