Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரணாம்பட்டு அருகே அதிகாலை விவசாய நிலத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்: தென்னைமரங்கள் சேதம்

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் அருகே உள்ள சாரங்கள், பத்தலபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், டி.டி. மேட்டூர், அரவட்லா, ரங்கம்பேட்டை, குண்டலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டுபன்றி, சிறுத்தை போன்ற விலங்குகள் அவ்வப்போது இரை மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு ஆகியவற்றை வேட்டையாடுவது, விவசாய பயிர்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த விலங்குகளை வனத்துறையினர் வனப்பகுதிகுள் விரட்டினாலும் மீண்டும், மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டசாகம் செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை குண்டலபல்லி கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்த 2 யானைகள் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் மரங்களை சேதப்படுத்தியுள்ளது. யானைகள் பிளிரும் சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள், விவசாய நிலத்தில் யானைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீப்பந்தங்கள் ஏந்தியும், பட்டாசுகள் வெடித்தும், மேளாதாளங்கள் அடித்தும் 2 யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் யானை குழிகள், பென்சிங் தடுப்பு சுவர்கள் போன்றவை அமைத்து கொடுக்க நடவடிக்கை வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.