மூணாறு: மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித்திரியும் படையப்பா யானை விவசாய பயிர்களை அழித்து அட்டகாசம் செய்து வருகிறது. கேரள மாநிலம், மூணாறில் கடந்த ஒரு வாரமாக எஸ்டேட் பகுதியில் சுற்றி திரியும் படையப்பா யானை, நேற்று முன்தினம் இரவு அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பின் அப்பகுதியில் உள்ள நிலங்களில் விளைந்த பட்டர்பீன்ஸ், முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற பயிர்களை தின்றது. மேலும் விளைநிலங்களையும் நாசம் செய்தது. மேலும், 2 மணி நேரம் அப்பகுதியில் பீதி ஏற்படுத்திய யானையை தொழிலாளர்கள் கூச்சலிட்டு காட்டுக்குள் விரட்டினர்.
மேலும் இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் படையப்பா யானை அடிக்கடி உலா வருவதால், வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் உட்பட உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர். படையப்பா யானை மக்களை தாக்குவதில்லை என்றாலும், இரவு நேரங்களில் சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறிப்பது, தண்ணீர் குழாய்களை சேதப்படுத்துவது, விவசாய பயிர்களை அழிப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது. இதனால் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கன்வாடி சேதம்
மூணாறு அருகே மேலும் கண்டத்திகுடியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் சுவரை நேற்று முன்தினம் இரவு ஒரு காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது. அங்கன்வாடி கட்டிடத்திற்குள் விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களையும் தின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.


