சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் புதிய வேளாண் பயிர் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டறிந்து உழவர்களிடையே அறிமுகப்படுத்த வேண்டும். உழவர்களுக்கு கூடுதல் வருமானம் பெறும் வகையில் செஞ்சந்தனம், சந்தனம், தேக்கு, மகோகனி போன்ற மரப்பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதுடன் ஊடுபயிர் சாகுபடிக்கேற்ற பயிர்களை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து, உழவர்களிடையே பரவலாக்கம் செய்திட வேண்டும் என்றார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மைத்துறை இயக்குநர் முருகேஷ், சர்க்கரைத்துறை இயக்குநர் அன்பழகன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.