திருவெறும்பூர் : திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பத்தானப்பேட்டையில் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்ததை வேளாண் விஞ்ஞானிகள் குழு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருவெறும்பூர் வட்டாரம்- பத்தாளப்பேட்டை கிராமத்தில் சம்பா நடப்பு ஆண்டு நடவு செய்த வயல்களில் சுமார் 70 ஏக்கர் சிஆர்.1009 ரகம் பூச்சி, நோய் மற்றும் பாசிப்படர்ந்து பாதிப்புக்கு ஏற்பட்டது. இத்தகவல் வேளாண்மை உதவி இயக்குனர் சுகன்யா தேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க திருச்சி வேளாண்மை இணை இயக்குநர் வசந்தா கேட்டுக்கொண்டதன் பேரில் திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சிறுகமணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 4 பேர் கொண்ட விஞ்ஞானிகள் நோயியல் துறை- பேராசிரியர் டாக்டர் சேதுராமன், பூச்சியியல் துறை- துணை பேராசிரியர் ராதாகிருஷ்ணன், பயிர் மரபியல் துறை- பேராசிரியர் ஜெயபிரகாஷ், மண்ணியல் துறை துணை பேராசிரியர் ஜானகி அடங்கிய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிப்பிற்கு ஏற்ற பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குநர் (மா.திட்டம் ) கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) மாரியப்பன் உடனிருந்தனர். வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுமாறு பரிந்துரை செய்தார்.

