Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்பு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், உழவர்களின் நலனைக் காத்து வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதோடு, விளைபொருள் வீணாகாமல் தடுத்து அவற்றை மதிப்புக்கூட்டி அதிக வருவாய் பெற்றிடவேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் ஆணைப்படி, 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், வேளாண் பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த ஒரு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 10 கோடி ரூபாய் வரையிலான புதிய மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் தொடங்கப்படும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொழில்களுக்கு (சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அட்டவணைப்படி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இதற்கான, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிக அளவில் விண்ணப்பங்களைப் பெற, திட்டம் குறித்த விழிப்புணர்வினைப் பெருமளவு எற்படுத்துமாறு அனைத்து மாவட்ட வேளாண் விற்பனைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண்/தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலைபதப்படுத்தும் திட்டங்களாக இருக்கவேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களில் குறிப்பாக விரைவில் அழுகக்கூடிய விளைபொருட்களில் (காய்கறிகள்,பழங்கள், பூக்கள் போன்றவற்றில்) ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள மதிப்புக்கூட்டிய பொருட்களைத் தயாரிக்க ஏதுவான நவீன மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை மாவட்டங்கள் தோறும் தேர்வு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5% ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகப் பெறப்படவேண்டும் என்பதால், இவர்கள் வங்கிக்கடன் பெறத் தேவையான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தயாரிக்க மாவட்ட அளவில் உள்ள ஆலோசகர்கள் உதவுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கான வழிமுறைகளை வழங்கவேண்டும் என்றும் வேளாண்மை விற்பனைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் பலன் தொழில் தொடங்க விருப்பம் உள்ள அனைவரையும் சென்றடையும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டங்கள். வங்கிகள் குழுக் கூட்டம் ஆகியவற்றிலும் எடுத்துரைக்க அறிவுரை வழங்கப்பட்டது. முதன்மை வங்கிகளின் கிளை மேலாளர்களை நேரடியாக அணுகி, இத்திட்டம் குறித்து எடுத்துரைக்கக் கூறப்பட்டுள்ளது.

வங்கியில் கடன் ஒப்புதல் பெறப்பட்டபின், மானியம் பெறுவதற்கான அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்பக்குழு மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் உடனடியாக மதிப்பாய்வு செய்யப்பட்டு தகுந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே, வேளாண், தோட்டக்கலை விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்களை மேற்கொண்டு தரமான உற்பத்திப்பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து பொருளாதார ஏற்றம்பெற ஆர்வமுள்ள அனைத்து தொழில்முனைவோர்களும் 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைத்திட அரசின் மானிய உதவியுடன் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தைப் உழவர் நலத்துறை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்மை அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.