சென்னை: நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வேளாண் வணிக திருவிழாவில் 1,57,592 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025’ கடந்த 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை அதிகரித்து உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், பொதுமக்கள், இயற்கை நல ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கே பயன்பெறும் வகையில் ‘வேளாண் வணிகத் திருவிழா’ அமைந்திருந்தது.
இரண்டு தினங்களில் 15,420 விவசாயிகள், 1,42,172 பொதுமக்கள் என 1,57,592 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். ரூ.2.89 கோடி மதிப்பிலான 121 மெட்ரிக் டன் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகள், உடனடியாக உண்ணும் உணவுகள், மூலிகை உணவு பொருட்கள், பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள் போன்ற பல்வேறு பொருட்கள் பொதுமக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.