Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்ட விரோத தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை டிஆர்ஓ தலைமையில் குழு அமைத்து ஆய்வு

*கலெக்டர் தகவல்

ஊட்டி : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வனம் மற்றும் வன பாதுகாப்பு குறித்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த வழக்கில், ஊட்டி, கொடைக்கானலில் உரிய அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அந்த விடுதிகளில் தங்க சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் எத்தனை தங்கும் விடுதிகள் உள்ளன, அதில் எத்தனை விடுதிகள் முறையான அனுமதி பெற்றுள்ளன, அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் எத்தனை என்பது குறித்து ஆய்வுசெய்ய மாவட்ட வருவாய் அலுவலர், உள்ளூர் நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இக்குழு ஆய்வுகள் மேற்கொண்டு தங்கும் விடுதிகள் சுற்றுலாத் துறையிடமிருந்தோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தோ முறையான உரிமத்தைப் பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்க்க முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அவை விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், உடனடியாக மூடப்பட வேண்டும். சுற்றுலா நகரங்களில் சட்ட விரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் எளிதாக புகார் செய்யும் விதமாக பிரத்யேக தொலைபேசி எண்கள், இணையதள வசதிகளையும் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர், மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களை கொண்டு குழுவை நீலகிரி மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

சட்டவிரோத காட்டேஜ்கள், விடுதிகள் குறித்த புகார்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் காட்டேஜ், ஹோம் ஸ்டேஸ், லாட்ஜ்கள், ரெசார்ட்கள் ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் காட்டேஜ்கள், ஹோம் ஸ்டேக்கள், லாட்ஜ்கள், ரெசார்ட்கள் குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஹெல்ப் லைன் 9442772709 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இதே எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார் அனுப்பலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.