நம் நாட்டின் ‘சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்பு வசதியை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால் இந்தியா தீர்க்கமான தக்க பதிலடி கொடுக்கும்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த விஜய தசமி விழாவில் இவ்வாறு அவர் பேசியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்த பின்னரும், சர் கிரீக் பகுதியில் எல்லை தொடர்பான பிரச்னையை உருவாக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா பல முறை முயற்சி செய்தது. ஆனால், இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் நோக்கம் தெளிவாக இல்லை. அதனால், பேச்சுவார்த்தை துவங்காமலேயே போய்விட்டது. சர் கிரீக் பகுதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள சதுப்பு நிலப்பகுதியாகும். இது, 96 கி.மீ., நீளமுள்ள நீர்வழி பாதையாக உள்ளது. இது, குஜராத்தில் உள்ள கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு இடையில் அமைந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ உயர் பதவியில் இருப்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜினாமா செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் துருப்புகளிடையே ஆழ்ந்த பதற்ற உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள 12வது படைப்பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு கிட்டத்தட்ட 200 அதிகாரிகளும் 600 வீரர்களும் ராஜினாமா செய்துள்ளனர். கூடுதலாக, வடக்கு கட்டளை பகுதியில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் 500 வீரர்களும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டில் மங்கல் படைப்பிரிவு 75 அதிகாரிகளும் 500க்கும் மேற்பட்ட வீரர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர். இதனால், சொந்த நாட்டு மக்களையே பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தும் அபாயகரமான நிலை அங்கு உருவாகியுள்ளது. இதை திசை திருப்ப வேண்டும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் மன உறுதியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, சர்வதேச எல்லையான சர் கிரீக் அருகே பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்பு வசதியையும், பாதுகாப்பையும் அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக, பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என்பதையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டி உள்ளார்.
எல்லையில், பாகிஸ்தான் வாலாட்டும் பகுதிகளை, இந்திய பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக, பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தல் கொடுக்க முயற்சித்தால், வரலாற்றையும், புவியியலையும் மாற்றக்கூடிய கடும் விளைவை இனி பாகிஸ்தான் சந்திக்க நேரிடும். இதை, நமது ராணுவம் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. கடந்த 1965ம் ஆண்டு போரில், இந்திய ராணுவம் லாகூர் சென்று தாக்கும் திறனை வெளிப்படுத்தியது. தற்போது 2025ல் இந்தியாவில் இருந்து சர் கிரீக் பகுதி வழியாக கராச்சிக்கு சென்று தாக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது. இதையெல்லாம், நினைவில் கொண்டு, வாலாட்டுவதை நிறுத்தினால், பாகிஸ்தானுக்கு நல்லது.