Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீண்டும் ஒரு கேலிக்கூத்து

பிரிக்க முடியாதது எது என்றால் அது ‘பாஜவும், பலத்த சர்ச்சைகளும்’ தான். இதற்கு ஆதாரமான எத்தனையோ சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இலவசங்கள் ஏழைகளை சோம்பேறியாக்கும் என்று சூளுரைத்தது, மாமிசம் உண்பவர்கள் அரக்கர்கள் என்றது, கொரோனாவை விரட்ட வீடுகளில் விளக்கேற்றி வைத்து கைதட்டியது என்று இதை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசில் இருந்து பாஜவிற்கு தாவிய கவுன்சிலர்களை எம்எல்ஏ ஒருவர் கோமியம் குடிக்க வைத்து சடங்குகள் நடத்தியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ஹெரிடேஜ் நகர மேயர் முனேஷ்குர்ஜார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து குசும்யாதவ் என்பவர் பாஜ சார்பில் மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 7 காங்கிரஸ் கவுன்சிலர்களும், சுயேச்சை கவுன்சிலர் ஒருவரும் ஆதரவு அளித்தனர். இவர்கள் 8 பேரும் முறையாக பாஜவில் இணைந்தனர். இந்தநிலையில் அம்மாநிலத்தின் ஹவாமகால் தொகுதி பாஜ எம்எல்ஏவான பால்முகுந்த் ஆச்சாரியா, கவுன்சிலர்களை வைத்து நூதன பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து சடங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அப்போது காங்கிரசில் இருந்து பாஜவுக்கு வந்த கவுன்சிலர்களை வரிசையாக நிற்க வைத்துள்ளார். அவர்கள் மீது கோமியமும், கங்கை நீரும் தெளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக கவுன்சிலர்களை கோமியம் குடிக்கவும் வைத்துள்ளனர். இது ஒரு புறமிருக்க பூஜை குறித்து பாஜ எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கொடுத்துள்ள விளக்கம் தான், சர்ச்சைகளின் உச்சமாக மாறியுள்ளது. ‘‘மாட்டு மூத்திரமாக நாம் பார்க்கும் கோமியம் புனிதத்தின் உச்சமானது. அது நம்மீது படும்போது தீவினைகளும், பாவங்களும் விலகும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஊழல் என்னும் பெரும்பாவத்திற்கு இந்த கவுன்சிலர்கள் உந்தப்பட்டுள்ளனர்.

அதை செய்யக்கூடாது என்பதற்காகவே பாஜவில் இணைந்துள்ளனர். இந்த கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து அவர்களை புனிதமாக்குவதற்கு இந்த பூஜை நடந்தது. இதன் மூலம் அவர்கள் புனிதப்பட்டு விட்டார்கள்’’ என்பது தான் அந்த விளக்கம். பொதுவாக மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் மனிதரை நல்வழிப்படுத்தும் சிந்தனைகளை மட்டுமே போதிக்கிறது. சடங்குகளும், சம்பிரதாயங்களும் இதை முன்னிறுத்தியே நடக்கிறது. இதில் இந்து மதத்தை பொறுத்தவரை ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு சில சடங்குகளை செய்வது பிரதானமாக உள்ளது.

கிரகங்களை அடிப்படையாக கொண்டு நாம் செய்யும் பரிகாரங்கள், தீமைகளை தவிர்த்து நன்மைகளை தரும் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அரசியலில் ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்த கோமியம் குடிக்க வைக்கிறேன் என்று பாஜ எம்எல்ஏ விளக்கம் கொடுத்திருப்பது ஒரு கேலிக்கூத்து. அதேநேரத்தில் மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட மக்களின் மனதை காயப்படுத்தும் ஆணவச்செயல் என்றால் அதுவும் மிகையல்ல. இது ஒருபுறமிருக்க, கோமியம் குடித்தால் பெரும் ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் புனிதராகி விடுவார்களா என்று எளிய மனிதர்கள் எழுப்பும் கேள்வியையும் நாம் எளிதாக புறந்தள்ளி விட முடியாது என்பதே நிதர்சனம்.