Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீண்டும் மகுடம்

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவதை வைத்துத்தான் ஒரு வீரரின் திறமை மதிக்கப்படும். ஆனால், கால மாற்றங்களில் ஒரு நாள் கிரிக்கெட் வந்தது. இதையடுத்து, அரங்கில், டி20 போட்டிகள் அறிமுகமாகின. 20 ஓவர்களில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்தனர். டி20க்கான வரவேற்பில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மவுசு குறையுமோ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், டெஸ்ட் அதற்கான அந்தஸ்தை இழக்கவில்லை. ஒரு பரபரப்பான தொடரை விளையாடி இந்தியா - இங்கிலாந்து அணிகள், டெஸ்ட் போட்டிகள் தான் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் என நிரூபித்துள்ளன. 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் ஒவ்வொரு நாளும், டி20க்கு நிகரான விறுவிறுப்புடன் நகர்ந்தது.

பிரண்டன் மெக்கலத்தின் பயிற்சியின் கீழ், டெஸ்டில் பேஸ்பால் கிரிக்கெட் முறையில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வந்தது. குறைந்த ஓவர்களில் கூடுதல் ரன் குவித்து, எதிரணிக்கு சிக்கலை தந்தது. ஆனால், இத்தொடரில் ஒரு சில போட்டிகளை தவிர, பேஸ்பால் ஆதிக்கத்தை இங்கிலாந்து அணியால் திறம்பட செயல்படுத்த முடியவில்லை. 5 போட்டிகளுமே 5 நாள் வரை முழுமையாக விளையாடியது மிகவும் சிறப்பம்சம். ரோகித் சர்மா, விராத் கோஹ்லி போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றநிலையில், இளம் படையுடன் 25 வயதான சுப்மன் கில்லை கேப்டனாக கொண்டு களமிறங்கியது இந்திய அணி. இதனால் இங்கிலாந்து எளிதில் வெல்லுமென எதிர்பார்க்கப்பட்டது.

தொடரின் துவக்கத்திலேயே அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எல்லா போட்டிகளில் பங்கேற்பது சிரமமென கூறப்பட்டது. இது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருக்குமென கருதப்பட்டது. ஆனால், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சுமையை தன் ேதாளில் தாங்கிக் கொண்டார். ஒவ்வொரு பந்தையும் 135 கிமீ வேகத்திற்கு குறையாமல் வீசினார். இத்தொடரில் அவர் வீசிய பந்துகளின் எண்ணிக்கை 1113. அதாவது, 185.5 ஓவர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஒரு சாதனையாகும். 23 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இத்தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தாலும், வென்ற 2 போட்டிகளிலுமே பும்ரா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக ஒரு பெரிய டெஸ்ட் தொடரில் களமிறங்கிய பதற்றம் துளியுமின்றி விளையாடி சுப்மன் கில்லும் பாராட்டிற்குரியவர். 5 போட்டிகளில் 754 ரன் குவித்து சாதித்துள்ளார். டி20 சூறாவளியில் டெஸ்ட் கிரிக்கெட் பேரழிவை சந்திக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகுபலி போல பிரமாண்டமாக எழுந்துள்ளதை கிரிக்கெட் வல்லுனர்கள், ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இந்திய, இங்கிலாந்து ஊடகங்கள் டி20யில் 120 பந்துகள், ஒன்டேயில் 300 பந்துகள்... ஆனால், டெஸ்டில் ஒவ்வொரு பந்தும் சுவாரஸ்யமானவை என்பதை இத்தொடர் நிரூபித்துள்ளது. காலில் காயமடைந்த ரிஷப் பண்ட், கையில் காயமடைந்த கிறிஸ் வோக்ஸ் இருவரும் களமிறங்கி டெஸ்ட் போட்டியை உயிர் பெறச் செய்து விட்டனர். டெஸ்ட் போட்டிகள் இனி அனைவரும் ரசிக்கும் வகையில் முக்கிய இடம் பெறும். இந்திய - இங்கிலாந்து அணிகள் டெஸ்டின் அந்தஸ்தை பல மடங்கு உயர்த்தி விட்டன என புகழ்ந்து தள்ளியுள்ளன. அன்பு, கோபம், ஆத்திரம், வேகம், விவேகம், அர்ப்பணிப்பு என அத்தனையும் வெளிப்பட்ட இந்த டெஸ்ட் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து விட்டது. மீண்டும் மகுடம் சூடி தன்னை கவுரவப்படுத்திக் கொண்டுள்ளது.