Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் தொடர் மழையால் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

*77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால், 24 ஆண்டுகளுக்கு பின்னர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், 5 லட்சத்து 14 ஆயிரத்து 326 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட மாவட்டமாகும். இதில் வனப்பகுதிகள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 409 ஹெக்டேரும், தரிசு நிலங்கள் 6 ஆயிரத்து 341 ஹெக்டேரும், சாகுபடி பரப்பு 1 லட்சத்து 97 ஆயிரத்து 564 ஹெக்டேரும் உள்ளது.

இங்கு காவிரி மற்றும் தென்பெண்ணையாறு பாய்கிறது. காவிரியாறு அஞ்செட்டி தாலுகா வழியாக, தென்மேற்கு பகுதி வழியாக சென்று ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் கலக்கிறது.

கர்நாடக மாநிலம், நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த காலங்களில் ஆற்றுப்படுகை பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்தது.

மாவட்டத்தில் ஆற்றுப்படுகை பகுதிகளில் நெல் 20 ஆயிரத்து 687 ஹெக்டேரும், ராகி 48 ஆயிரத்து 944 ஹெக்டேரும், சிறு தானியங்கள் 11 ஆயிரத்து 937 ஹெக்டேரும், பயறு வகைகள் 48 ஆயிரத்து 749 ஹெக்டேரும், கரும்பு 4 ஆயிரத்து 78 ஹெக்டேரும், மா 30 ஆயிரத்து 17 ஹெக்டேரும், தென்னை 13 ஆயிரத்து 62 ஹெக்டேரும், புளி ஆயிரத்து 362 ஹெக்டேரும், இதர பயிர்கள் 43 ஆயிரத்து 199 ஹெக்டேரும் பயிரிடப்பட்டு வந்தது.

ஆற்றுப் படுகை பகுதியில் நெல், கரும்பு கடந்த காலங்களில் பயிரிடப்பட்டது. ஆற்றுப்பகுதி மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை, படேதலாவ் ஏரி, பாரூர் பெரிய ஏரி ஆகிய பகுதிகளில் இரண்டு போக நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் ஆற்றுப்படுகை பகுதியில் நெல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆற்றுப்படுகையை நம்பி கிணற்று பாசனம் மூலம் மலர் செடிகள், மா, தென்னை, வெற்றிலை ஆகியவை பயிரிடப்பட்டு வந்தது. இந்நிலையில் சீரான மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

கிருஷ்ணகிரி பகுதியில் 600 அடிக்கு கீழும், பர்கூர், ஜெகதேவி, மத்தூர் பகுதிகளில் சுமார் ஆயிரம் அடிக்கு கீழும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் நிலங்களை விற்றும், பலர் வேறு வேலை தேடியும் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், கால்நடை வளர்ப்பும் குறைந்துபோனது. கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது தென்னை, மா போன்ற மரங்களையாவது காப்பாற்ற வேண்டும் என, பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பாய்ச்சினர். நாளடைவில், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றியதால், பல்வேறு இடங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி, அதை டிராக்டர் மூலம் எடுத்து வந்து தென்னை மரங்களை காப்பாற்ற கடும் அவதிப்பட்டனர்.

அப்போதும் பெரும்பாலான தென்னை மரங்கள் காய்ந்து போனது. இந்நிலையில், தற்போது பருவமழை ஏமாற்றமளிக்காமல் பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள 600க்கும் பஞ்சாயத்து ஏரிகள், பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 77 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது.

இதில் பல ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட ஏரிகளுக்கும் தண்ணீர் வந்தது. பெரும்பாலான ஏரிகள் 70 சதவீதம் நிரம்பியுள்ளது. இதனால் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் மிகவும் வறட்சியாக இருந்த வேப்பனஹள்ளி, பர்கூர், மத்தூர் ஆகிய ஒன்றிய பகுதிகளிலும் தொடர் மழையின் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வால், குடிநீர் பிரச்னையும் தீர்ந்துள்ளது. அத்துடன் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெறுவது வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.