ஆப்ரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தது கண்டுபிடிப்பு மதுரையில் வாழும் உலகின் மூத்த குடிமகன்: 70,000 ஆண்டு தொன்மை மரபணுவால் ஆச்சர்யம், வியப்புடன் தேடி வரும் வெளிநாட்டு அறிஞர்கள்
மதுரை: ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி’ எனும் தமிழ் மரபை படிக்க, எழுதத்தெரிந்த தமிழ் மக்கள் இருந்ததை கீழடி ஆய்வு மெய்ப்பித்துள்ளது. கீழடி மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் இருந்து குடி பெயர்ந்த மூத்த மனித இனத்தின் மரபணுவை கொண்ட அபூர்வ மனிதரும் மதுரை பகுதியில்தான் வாழ்ந்து வருகிறார் என்பது ஆச்சர்யச் செய்தி. இந்த அபூர்வ மனிதரை சந்தித்து, ஆய்வுத்தகவல்களை தொகுத்து வரும் தொல்லியல் ஆய்வாளர் மதுரை ராஜா கூறியதாவது:
மதுரை உசிலம்பட்டி அருகே ஜோதி மாணிக்கம் என்ற குக்கிராமம் உள்ளது. இவ்வூரில் 1977ல் பிறந்தவர் விருமாண்டி. அமெரிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மதுரை காமராசர் பல்கலையில் பணிபுரிந்த பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் இணைந்து, தங்கள் ஆய்வில் இம்மனிதரை கண்டறிந்தனர். அமெரிக்காவில், இம்மனிதர் குறித்து புத்தகமே வெளியிடப்பட்டுள்ளது. மனித இனம் எப்போது தோன்றியது எனும் ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனினும், மனிதன் தோன்றியது மத்திய ஆப்ரிக்கா எனும் கூற்றும் ஏற்கப்பட்டிருக்கிறது.
ஆய்வாளர்கள் இம்மனித இனத்தை, ‘ஹோமோ சேப்பியன்’ என்கின்றனர். புதிய கற்கால துவக்கத்தில், மத்திய ஆப்ரிக்காவில் இருந்து, மக்கள் குழுக்களாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலதரப்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். தமிழக பகுதிகளுக்கும் வந்தனர். ஆப்ரிக்காவில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மனிதரின் மரபணு எம்.160 என்பது கண்டறியப்பட்டது. இம்மனித மரபினர் ஆப்ரிக்காவில் இன்றும் வாழ்கின்றனர்.
அடுத்து, 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மரபணு எம்.130 என்பதையும் கண்டறிந்தனர்.இம்மரபணுவினரை தேடி அமெரிக்காவின் புவியியல் சார் மரபணு ஆராய்ச்சியாளர் ஸ்பென்சர் வெல்ஸ் பயணப்பட்டார். ஸ்பென்சர் வெல்ஸ் குழுவுடன் தனி விமானத்தில் உலகின் பழங்குடி மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தமிழகத்தின் மதுரைக்கு வந்தார்.
மதுரை காமராசர் பல்கலையில் பணியாற்றிய ராமசாமி பிச்சப்பனுடன் இணைந்து இப்பணியை தொடர்ந்தார். 1996ல் நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் நடத்திய சோதனை ஆய்வுகளை தொடர்ந்து, பழமைக்குரிய உசிலம்பட்டி பகுதி கல்லூரி மாணவர்களின் ரத்தமும் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது உசிலம்பட்டி கல்லூரியில் படித்த, ஜோதிமாணிக்கம் கிராமத்தின் விருமாண்டி என்பவரது ரத்தம் எம்.130 என்ற பழமைக்குரிய மரபணுவை காட்டியது.
நூலக பட்டயப் படிப்பை படித்து முடித்து, மதுரை காமராசர் பல்கலையில் தொகுப்பூதிய பணியில் இருந்த விருமாண்டியிடம் ஸ்பென்சர் வெல்ஸ், ராமசாமி பிச்சப்பன் குழுவினர் தொடர் ஆய்வுகள் நடத்தினர். இதில் விருமாண்டியே 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எம்.130 மரபணுக்காரர் என்பது உறுதிப்பட்டது. இவரை நேரில் சந்தித்த ஸ்பென்சர் வெல்ஸ் வாழ்த்தியதுடன், இச்செய்தியை உலகெங்கும் அறிவித்தார்.
தனது ‘டீப் ஆன்செஸ்ட்ரி ஜெனியோகிராபிக்’ புத்தகத்திலும், விருமாண்டி குறித்த விபரங்களை பதிவிட்டார். இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் மைக்கேல் உட், விருமாண்டியை சந்தித்து, தனது ‘த ஸ்டோரி ஆப் இந்தியா’ புத்தகத்தில் உலகின் முக்கியமான மனிதர் என குறிப்பிட்டுள்ளார். இந்த அபூர்வமான மனிதரை வெளிநாட்டு அறிஞர்கள் தமிழகம் வந்து பார்த்துச் செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.