ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்ததால் சர்ச்சை: காங்., எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றுமுன்தினம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆப்கன் அமைச்சருடன் சேர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. எனினும், ஆப்கன் வெளியுறவு அமைச்சர் புதுடெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு திடீரென தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடீர் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,’ பெண் பத்திரிக்கையாளர்களை ஒரு பொது மன்றத்தில் இருந்து விலக்க அனுமதிக்கும்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மிகவும் பலவீனமானவர்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறாரா?. நமது நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சமமாக பங்கேற்பதற்கு உரிமை உண்டு.
ஆனால் இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிராக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது பெண் சக்தி குறித்த உங்கள் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகின்றது’ என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா வந்துள்ள தலிபான் பிரதிநிதியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கான உரிமையை நீங்கள் அங்கீகரிப்பது தேர்தலுக்காக மட்டுமே என்பது உண்மையல்ல என்றால், திறமையான இந்திய பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி ஏற்பட்டது? பெண்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு, பெருமை அல்லவா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கூறுகையில்,‘தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தகி, பெண் பத்திரிகையாளர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்திய மண்ணில் முழு நெறிமுறைகளுடன் ‘ஆண்கள் மட்டும்’ செய்தியாளர் சந்திப்பை நடத்த நம் அரசாங்கத்திற்கு எப்படித் தைரியம் வந்தது? இதற்கு ஒப்புக்கொள்ள ஒன்றிய அரசுக்கு எப்படி துணிச்சல் வந்தது? நமது முதுகெலும்பில்லாத ஆண் பத்திரிகையாளர்கள் ஏன் அந்த அறையில் இருந்தனர்? பெண் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர்களிடமிருந்து விலக்க தலிபான் அமைச்சர் அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் அவமதித்துள்ளது. முதுகெலும்பில்லாத நயவஞ்சகர்களின் வெட்கக்கேடான கூட்டம்’ என்றார்.
எங்களுக்கு தொடர்பு இல்லை ஒன்றிய அரசு விளக்கம்; பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய வெளியுறவு அமைச்சகம், ‘டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய வெளியுறவுத்துறைக்கு எந்த பங்கும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுலும், பாக்.கும் பதறுவது ஏன்?
ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்த பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ‘இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் நெருங்கி வருவதைக் கண்டு பாகிஸ்தானும் ராகுல்காந்தியும் பதறுகிறார்கள். மீண்டும் ராகுல் காந்தி போலி செய்திகளைப் பரப்புவதன் மூலம் பாகிஸ்தானுக்காகப் போராடுகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.