ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411-ஆக உயர்வு
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலமுறை நில அதிர்வுகளும் உணரப்பட்டன.
இந்த சம்பவத்தில் குனார், லக்மான், நங்கர்ஹார் மற்றும் நூரிஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் நேற்றைய நிலவரப்படி 1,100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும், 3,500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411-ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, சுமார் 12,000 மக்கள் இந்த நிலநடுக்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, இந்தியத் தூதரகத்தின் மூலம் 15 டன் உணவுப் பொருட்கள் காபூலிலிருந்து குனார் பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி மூட்டைகளுடன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வானங்களை படங்களை வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்த இக்கட்டான நேரத்தில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளது. நிலநடுக்கத்தால் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.