நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாக ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானியர்கள் 23 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களில் 1,500 குடும்பங்கள் உட்பட 49,000 குடும்பங்களில் நாடு தழுவிய அளவில் ஐநா மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி ஆப்கனிஸ்தான் மக்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான், 23 லட்சம் பேர் ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். இதனால், பற்றாக்குறை இன்னும் அதிகரித்துள்ளது. சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி ஆகியவை வெகுவாக சரிந்துள்ளன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் இன்னும் குறிப்பாக கிராமப்புற பெண்கள் மத்தியில் இவற்றுக்கான அணுகல் சாத்தியமற்றதாக உள்ளது. ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் உண்ணும் உணவின் அளவை குறைப்பது, சொத்துகளை விற்பது, கடன் வாங்குவது போன்ற எதிர்மறை நடவடிக்கைகளின் மூலம் சமாளிக்கின்றன. ஆப்கனிஸ்தானிலேயே தொடர்ந்து இருந்து வரும் குடும்பங்களில் 81 சதவீத குடும்பங்களும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய குடும்பங்களில் 88 சதவீத குடும்பங்களும் கடனால் தவித்து வருவதாக ஐநா உயர் அதிகாரி கன்னி வக்னராஜா தெரிவித்துள்ளார்.
