டெல்லி: ஆப்கானிஸ்தான் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற கோரும் நிலையில், ஆப்கனில் வெளிநாட்டு ராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பு 2021ல் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. ஆனால் பல நாடுகள் இன்னும் தலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. கடந்த ஜூலையில் முதல் நாடாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப் படை தளத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கு அவர் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற டிரம்பின் எச்சரிக்கைக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பிராந்திய அமைதி மற்றும் நலன்களுக்கு உதவாது என்றும் ரஷ்யாவில் நடந்த ஆப்கானிஸ்தான் குறித்த 7வது ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ராணுவம் வந்தால் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அமைப்பே 'மாஸ்கோ பார்மட் கன்சல்டேசன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான் ஆகும். இந்த அமைப்பில் 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.