ஆப்கனுடன் பேச்சுவார்த்தை தோல்வி தலிபான்களை அழித்து குகைக்குள் தள்ளுவோம்: பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகின்றது. இதற்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியதோடு, எல்லை தாண்டிய தாக்குதலை முன்னெடுத்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே கத்தாரில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தாக்குதல்களை நிறுத்த இருதரப்பும் ஒப்புகொண்டன. இந்நிலையில் துருக்கியில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் இடையேயான நான்கு நாள் பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இரு நாடுகளையும் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும், ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. இதனால் பேச்சுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘‘தலிபான் துரோகத்தை நீண்ட காலமாக பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பாகிஸ்தானுக்குள் எந்தவொரு தீவிரவாத தாக்குதலோ அல்லது தற்கொலை குண்டுவெடிப்போ நடந்தால் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களை அழித்து குகைக்குள் தள்ளிவிடுவோம்” என்று சமூக ஊடகத்தில் எச்சரித்துள்ளார்.
