ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு பெண்கள் சக்தி என்று மோடி பேசுவது வெற்று கோஷம்: செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது வெற்றுக் கோஷம் என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவு: இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கண்டனத்திற்குரியது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் நாளில் இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய அரசியலமைப்பு வழங்கும் சம உரிமைக்கும், பெண்களின் அடிப்படை மனித உரிமைக்கும் எதிரானது.
பெண் செய்தியாளர்களின் பங்கு, நம் நாட்டின் ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. பெண்களை விலக்கும் இத்தகைய நிகழ்வுகள், நம் சமூகத்தில் பாலின சமத்துவத்திற்கு எதிரான பின்னடைவை காட்டுகின்றன. பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது, வெற்றுக் கோஷம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஒன்றிய பாஜ அரசு உடனடியாக விளக்கம் அளித்து, இனி இப்படியான பாகுபாடுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பெண்களின் குரலை மவுனப்படுத்த முயலும் எந்தச் செயலையும் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.