காபூர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான், முதல் திருமணம் செய்த 10 மாதங்களில் 2வது திருமணம் செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி.20 கேப்டன் ரஷித் கான். இதுவரை 108 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடி 182 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 27 வயதான ரஷித் கான் தனது முதல் திருமணத்தை 2024 அக்டோபரில் காபூலில் செய்து கொண்டார். அவரது 3 சகோதரர்களும் (அமீர் கலீல், சாகியுல்லா மற்றும் ரசா கான்) அதே நாளில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் ரஷித்கானின் 2வது திருமணம் சில மாதங்களுக்கு முன், அதாவது ஆகஸ்ட் 2ல் நடந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆகஸ்ட் 2ல் என் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தமுள்ள அத்தியாயத்தை நான் தொடங்கினேன். நான் எப்போதும் விரும்பிய அன்பு, அமைதியை கொண்ட ஒரு பெண்ணை மணந்தேன். அவர் என் மனைவி, மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். இரக்கத்தையும், ஆதரவையும், புரிதலையும் காட்டிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். முதல் திருமணம் செய்த 10 மாதத்தில் 2வது திருமணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2வது திருமண படங்கள் வைரலாகி வருகின்றன.
