Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அடையாற்றில் புதிய நம்பிக்கை 40 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு திரும்பிய அரிய பறவைகள்

சென்னை: 40 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பிய அரிய பறவைகளால் அடையாற்றில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு அரிய வகை வலசைப் பறவைகள் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளன. அடையாறு முகத்துவாரத்தில் ஓய்ஸ்டர்கேட்சர் மற்றும் சாண்டர்ஸ் டெர்ன் பறவைகள் சமீபத்தில் காணப்பட்டுள்ளன.  இது நகரின் பறவை ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் ஏராளமான பறவைகள் வலசை வந்து செல்லும் பகுதியாக சென்னை இருந்தது.

ஆனால் 2000க்கு பிறகு அப்படி இல்லை என பலரும் வருத்தப்பட்டனர். ஆனால் தற்போது மீண்டும் பல முக்கிய பறவைகள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த அரிய நிகழ்வு, சென்னையின் கடற்கரைப் பகுதிகள் மீண்டும் பலதரப்பட்ட வலசைப் பறவைகளை ஈர்க்கத் தொடங்கியுள்ளதற்கான ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்த இரு பறவைகளுக்கும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுடன் நீண்டகாலத் தொடர்பு உண்டு.

பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் (BNHS) முன்னாள் துணை இயக்குநர் பாலச்சந்திரன், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோடியக்கரையிலுள்ள சரணாலயத்திலும், கன்னியாகுமரியிலும், பறவை வளையமிடுதல் ஆய்வுகளின்போதும் ஓய்ஸ்டர்கேட்சர் மற்றும் சாண்டர்ஸ் டெர்ன் பறவைகள் வழக்கமாகக் காணப்பட்டதை நினைவு கூர்ந்தார். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு, பாலச்சந்திரனும் அவரது குழுவினரும் கன்னியாகுமரியில் இந்தப் பறவைகளின் கூடு கட்டும் இடங்களைக் கண்டறிந்தனர்.

இவை அப்பகுதியின் கடலோரச் சூழலுக்கு அத்துணை சிறப்பாகப் பொருந்திக்கொண்டதால், மத்திய ஆசியாவின் அவற்றின் இனப்பெருக்க இடங்களுக்குத் திரும்பாமல், உள்ளூர்வாசிகளைப் போலவே அவை மாறிவிட்டன என்று பாலச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார். மாறி வரும் சென்னை: சென்னையின் பறவை ஆர்வலர்களுக்கு, இந்த மறு கண்டுபிடிப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகக் காணப்படாத இந்தப் பறவைகளின் வருகை, அடையாறு முகத்துவாரத்தின் சூழல் மேம்பட்டு வருவதற்கான அறிகுறியாகும்.

இந்த நுட்பமான, ஆனால் முக்கியமான சூழல் அமைப்பு, அதன் நீர் மற்றும் வானத்தைக் கண்காணிப்பவர்களுக்குத் தொடர்ந்து ஆச்சரியங்களையும் வெகுமதிகளையும் அளித்து வருகிறது.40 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய இந்த அரிய பறவைகள், சென்னை மீண்டும் ஒரு பறவை சொர்க்கமாக மாறுவதற்கான வாய்ப்பை உணர்த்துகின்றன. சூழல் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்ந்தால், மேலும் பல அரிய பறவை இனங்கள் சென்னைக்கு திரும்பி வரலாம் என்ற நம்பிக்கை பறவை ஆர்வலர்களிடையே நிலவுகிறது.

* சாண்டர்ஸ் டெர்ன் மறக்கப்பட்ட பறவை

சாண்டர்ஸ் டெர்ன் பறவை, ஒரு சிறிய டெர்ன் வகையின் துணைக் குடும்பமாகத் தவறாகக் கருதப்பட்டதால், நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டது. 1980களில் பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரி பில் ஹார்வி என்பவர் அடையாறு முகத்துவாரத்தில் இந்தப் பறவையைக் கண்டறிந்தார். மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியின் பறவையியல் நிபுணர் வி. சாந்தாராம் இது குறித்து கூறுகையில், \\”கடந்த 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் ஓய்ஸ்டர்கேட்சர் பறவைகள் அடையாறு பகுதிக்கு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே அரை டசனுக்கும் அதிகமான குழுக்களாக வருவதுண்டு” என்று நினைவு கூர்ந்தார்.

* ஓய்ஸ்டர்கேட்சர் கடலின் அரிய விருந்தினர்

ஓய்ஸ்டர்கேட்சர் என்பது ஒரு சிறிய, தரையில் கூடு கட்டும் கடல் பறவையாகும். இது பொதுவாகக் கடலோர மணல் திட்டுகள் மற்றும் சேற்றுப் பகுதிகளில் வாழ்கிறது. மீன், ஒட்டுயிரிகள் மற்றும் நத்தை போன்ற மெல்லுடலிகளை முக்கிய உணவாகக் கொள்ளும் இந்தப் பறவை, சென்னையின் வழக்கமான குளிர்காலப் பறவைகளின் லிஸ்ட்டில் ஒருபோதும் இருந்ததில்லை.

இங்கு இதன் இருப்பு, சென்னையின் முகத்துவாரங்களுக்கும் இந்தியப் பெருங்கடல் சூழல் மண்டலத்திற்கும் இடையேயான ஒரு பெரிய தொடர்பைக் காட்டுகிறது\\” என்று பறவை ஆர்வலர் கே.வி.ஆர்.கே. திருநாரணன் தெரிவித்தார்.