சென்னை: ‘தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி 100 நாட்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். திருப்போரூர் முருகன் கோயிலில் நேற்று வழிபாடு செய்த பின்னர், அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு தனது முதல் நாள் நடைபயணத்தை அவர் தொடங்கினார். பின்னர் பொதுக்கூட்ட மேடையில் அன்புமணி பேசியதாவது:
இன்று இந்த பயணத்தை தொடங்குவதற்கு காரணம் சமூகநீதி ராமதாஸ் பிறந்தநாள். ராமதாஸ் மகிழ்ச்சியோடும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும். ராமதாசின் கொள்கையை நிறைவேற்றவே இந்த நடைபயணத்தை தொடங்கி உள்ளேன். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அடித்தட்டில் இருக்கும் சமுதாயங்கள் முன்னேறும். தமிழகத்தில் சுமார் 180 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 96-ல் முதல்வர்கள் கிடையாது. 9000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
தமிழக காவல்துறையினர் நல்லவர்கள். ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பார்கள். தமிழகத்தில் இன்றைக்கு பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைக்கு காரணமாக இருப்பது மதுதான். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நோக்கி எங்களது அடிப்படை உரிமையை செய்து கொடுங்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டும். இந்த நடைபயணம் விளம்பரத்திற்கான நடைபயணம் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.