Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியவர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால்; காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. மேலும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகிறது. மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில், கூடவே கோடைக்கால நோய்களான ஹூட் ஸ்டோக் போன்றவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும். அதிலும் குறிப்பாக 50 வயதைத் தாண்டியவர்கள் இதை அதிகம் எதிர்கொள்கின்றனர். இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கியமானதாகவும், நாம் பெரிதாக கவனம் செலுத்தாததாகவும் டிஹைட்ரேசன் என்று அழைக்கப்படும் நீர்ச்சத்து இழப்பு உள்ளது. ஏனென்றால் நம் உடல் 60 சதவீதம் தண்ணீரும், மீதம் 40 சதவீதம் திசுக்களின் எடையாக உள்ளது. உடலில் உள்ள 60 சதவீத நீர்ச்சத்தில் 5 சதவீதம் குறைந்தால் கூட நீர்சத்து இழப்பு தீவிரமாகும். அதன்படி உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அது நேரடியாக ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.

அதேபோல் அதீத வியர்வையை பலரும் உடலுக்கு நல்லது என்றே நினைக்கின்றனர். வியர்த்தால் உடல் எடை குறையும் என்று நினைத்து, அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதிகமாக வியர்த்தால், அதுவும் வெயில் காலம் என்றால், உடல் நமக்கு ஒரு எச்சரிக்கையைக் கொடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வியர்வை என்பது வெறும் நீர் மட்டுமல்ல என்றும் அதனுடன் சேர்த்து சோடியம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவையும் வெளியேறுவதால், அதீத வியர்வை உடலுக்கு நல்லதல்ல. இது மட்டுமல்லாது வெயில் காலங்களில் மது, காபி மற்றும் கார்பனேடட் குளிர்பானங்களை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது, உடலிலிருந்து சிறுநீர் அதிகமாக வெளியேறி, அது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: கோடைகாலம் தொடங்கியவுடன் தர்பூசணி, மோர், இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை உண்பது பலரது வழக்கம். ஆனால் இந்த வெயில் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்று நினைத்துக்கொண்டு, வெயிலில் சுற்றுபவர்களுக்கு தொண்டை வறட்சி, தலைச்சுற்றல், மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர், சிவந்த கண்கள் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம்.

அப்படியென்றால் அவர்கள் நீரிழப்பு (Dehydration) பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று அர்த்தம். மனித உடல் எடுத்துக்கொள்ளும் நீரை விட அதிக நீர் உடலை விட்டு வெளியேறும்போது நீரிழப்பு பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு என்பது உடலில் இருந்து நீர் வற்றிப்போகும் நிலை மட்டுமல்லாது, உடலுக்கு அத்தியாவசியமான கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை வெளியேறிவிடும். மிகச் சாதாரணமான விஷயமாகப் பார்க்கப்படும் இந்த நீரிழப்பு சில நேரங்களில் உயிரிழப்பு வரை கொண்டு சென்றுவிடும். அதேபோல், ஒரே சமயத்தில் அதிக தண்ணீர் குடிப்பதால் அது பெரும்பாலும் சிறுநீராக வெளியேறிவிடும். எனவே ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பருக வேண்டும். அதுவும், வெயிலில் வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் என்றால் 500 மில்லி லிட்டர் தண்ணீரை கூடுதலாகவே எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் நீரிழப்பு மட்டுமல்லாது, சிறுநீரகக் கற்கள் தொடர்பான பிரச்னையும் ஏற்படும்.

குறிப்பாக பெரியவர்கள் வெளியில் செல்லும்போது தண்ணீருடன், ஓ.ஆர்.எஸ் கரைசல் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையொன்றால் இளநீர் மற்றும் மோர் போன்ற நீர் ஆதாரங்களை எடுத்து கொள்ளலாம். ஆனால் லஸ்ஸி, மசாலா மோர், ஐஸ் க்ரீம், கார்பனேடட் குளிர்பானங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் பெரியவர்கள், குழந்தைகள் வெயிலில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்பதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் தளர்வான பருத்தி உடைகளை அணிய வேண்டும். உணவில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோடைகாலங்களில் எண்ணெய், மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் தயார் செய்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.