அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கத் தேவை இல்லை : தேர்தல் ஆணையம்
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஒருதரப்பு சார்பில் உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், இந்த வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது எனவும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன. இதனிடையே, இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.மேலும், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், "அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கத் தேவை இல்லை. பீகார் தேர்தல் தொடர்பாக வேலைப் பளு அதிகமாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, எழுத்துப்பூர்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு, இந்த பிரச்சனை குறித்து உரிய முடிவெடுக்கப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் பதிலை அடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.