தர்மம் வெல்ல வேண்டும்; என்னை கட்சி பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து!!
சென்னை: என்னை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னதாக,, நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். பிரிந்து சென்றவர்களை எடப்பாடி ஒருங்கிணைக்காவிட்டால் நாங்கள் ஒருங்கிணைப்போம் என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், " தர்மம் தழைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டி நேற்று கருத்தை வெளிப்படுத்தினேன். அதனால் கழகத்தில் இருந்து நீக்கியதற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் வேதனைப்பட போவதில்லை; மகிழ்ச்சியுடன் பயணிப்பேன்."இவ்வாறு தெரிவித்தார்.