எம்ஜிஆர் கட்சி துவங்கியதையும் விஜய் கட்சி துவங்கியதையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு : அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
சென்னை : புதிய கட்சிகள் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை தங்களுக்காக திருட பார்க்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேந்திர பாலாஜி, "எம்ஜிஆரின் புகழும் பெருமையும் அதிமுகவிற்கே சொந்தம். திரை நட்சத்திரங்கள் யார் வந்தாலும் அவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூடும். விஜய்க்கு கூடும் கூட்டம்; கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல காட்டாறு போல ஓடும் கூட்டம். விஜய்க்கு வரும் கூட்டம் ஒட்டாக மாற வாய்ப்பு இல்லை. விஜய் தலைமையில் 3வதுஅணி அமையலாம், ஆனால் வெல்வதற்கான வாய்ப்பு கிடையாது.
களத்தில் அதிமுக - திமுக மட்டுமே இருக்கும். மக்களை ஒன்று திரட்டி அத்துமீறு அடங்கமறுப்பது அநாகரிகமான அரசியல். எம்ஜிஆர் கட்சி துவங்கியதையும் விஜய் கட்சி துவங்கியதையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு. புதிய கட்சிகள் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை தங்களுக்காக திருட பார்க்கின்றன. தவெகவினருக்கு ஒரு இயக்கத்தை நடத்தக்கூடிய திறமை கிடையாது. விஜய் இடத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் படை வீரர்களும், படைத்தளபதியும் இல்லை. அதிமுக, பாஜக கூட்டணி பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் இறுதி முடிவு. அதிமுக கூட்டணிதான் வெல்லும், எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்."இவ்வாறு தெரிவித்தார்.