Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றவியல் நீதி நிர்வாகத்தை புதிய சட்டங்கள் சீர்குலைக்கும்: எதிர்கட்சிகள் விமர்சனம்

புதுடெல்லி: மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில், எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து வலுக்கட்டாயமாக புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலுக்கு வந்தது. இந்நிலையில் புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில்,“மக்களவை தேர்தலில் அரசியல் மற்றும் தார்மீக அதிர்ச்சிக்கு பின்னர் மோடி ஜீ மற்றும் பாஜ அரசியலமைப்பை மதிப்பது போல பாசாங்கு செய்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இன்று(நேற்று) அமல்படுத்தப்பட்டுள்ள இந்த 3 கிரிமினல் சட்டங்களும் 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புல்டோசர் நீதி நாடாளுமன்ற அமைப்பில் மேலோங்குவதற்கு இந்தியா கூட்டணி இனி அனுமதிக்காது” என்ற குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘ தண்ணீர் மற்றம் புகையிலை விற்பனை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தியவந்த சாலையோர வியாபாரிக்கு எதிராக டெல்லி போலீசார் முதல் எம்ஐஆர்ஐ பதிவு செய்துள்ளனர்” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பர் தனது எக்ஸ் பதிவில், ‘‘ புதிய சட்டத்தில் 90-99 சதவீதம் கட், காப்பி, பேஸ்ட் பணி தான் நடந்துள்ளது. சில திருத்தங்களுடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய சட்டங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவை திருத்தங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம். குற்றவியல் நீதிநிர்வாகத்தை புதிய சட்டங்கள் சீர்குலைக்கும்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, இந்த மூன்று குற்றவியல் சட்டங்களும் இயற்கையில் தீங்கு விளைவிப்பவை என்று தெரிவித்துள்ளார்.