சென்னை: தனுஷுடன் அட்ஜெஸ்மென்ட் செய்தால் சினிமாவில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மேனேஜர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்ததாக டிவி நடிகை மான்யா ஆனந்த் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிவி நடிகை மான்யா ஆனந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது: சில மாதங்கள் முன்பு எனக்கு நடிகர் தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் தயாரிக்கும் படத்தில் நீங்க ஹீரோயினா நடிக்க முடியுமா என்று ஷ்ரேயாஸ் என்னிடம் கேட்டார். அத்துடன் ஹீரோவுடன் கமிட்மென்ட் இருக்கும் என்றும் அவர் சொன்னார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொன்னேன். தனுஷுடன் அட்ஜெஸ்ட்மென்ட் என்றாலும் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ெஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
அதேபோல் சமீபத்தில் இன்னொருவர் தனுஷின் மேலாளர் என்று கூறி திரைக்கதை அனுப்பி தனுஷுடன் படத்தில் நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள், வேறு தொழில் செய்பவர்கள் இல்லை. அந்த நபர் நிறைய நடிகைக்கு இதுபோன்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார். நான் தனுஷுடன் வேலை பார்த்த என்னுடைய சக நடிகை ஒருவரிடம் இதைபற்றி சொன்னேன். அதற்கு அவர், இது தனுஷுக்கே தெரியாமல் நடக்க வாய்ப்பிருப்பதாக சொன்னார். ஆனால் எனக்கு எது உண்மை என தெரியவில்லை.
பல நடிகைகளுக்கு இதுமாதிரி சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மான்யா ஆனந்த் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தனுஷின் மேலாளர் ஷ்ரேயாஸ், தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஒருவேளை அதுபோன்ற ஒரு மோசடி வலையில் மான்யா ஆனந்த் சிக்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


